முக்கிய பிரச்னைகளில் மோடி மவுனம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு முக்கிய பிரச்னைகளில் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் நேற்று ஒலிபரப்பானது. இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை ஒன்றிய பாஜ அரசு செய்திருந்தது.இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் உள்பட பிரதமரின் மக்கள் தொடர்பு இயந்திரங்கள் கூடுதல் நேரம் பணியாற்றின.

இந்நிலையில், ‘மனதின் குரல்‘ நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், “மோடியின் மன் கி பாத் 100வது நிகழ்ச்சிக்கு பெரும் ஆரவாரம் செய்யப்பட்டது. ஆனால், அதானி மோசடி, சீனாவுடனான அதானி தொடர்பு, நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜம்மு காஷ்மீர் கலவரங்கள், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளில் மோடியின் குரல் ‘மௌன் கி பாத்‘ பேசாத மவுனமான குரலாக இருக்கிறது.

மன் கி பாத் நிகழ்ச்சியின் தாக்கங்கள் குறித்து பெங்களூரு ஐஐஎம் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஆனால் பெங்களூரு ஐஐஎம் இயக்குநரின் கல்வி சான்றிதழ்கள் குறித்து கல்வி அமைச்சகம் சந்தேகம் எழுப்பியுள்ளது. கர்நாடகா போன்ற பாஜ ஆட்சி செய்யும் இரட்டை என்ஜின் அரசின் இரட்டை ஊழல்கள் பற்றி மோடி மவுனம் சாதிக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

Related posts

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை