வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர் கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி : கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமான குளியல் போடுவதற்காக கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுக்கு முன்னர் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு அணையாகும். 15 அடி உயரத்திலிருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் இந்த அணையில் கடற்கரை போன்ற மணல் பரப்பும், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளும் இருப்பதால் இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம்.

நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியாக கொட்டும் அணை தண்ணீரில் குளித்தும், அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் சுவையான மீன்களை சாப்பிட்டும், மணல் பரப்பில் அமர்ந்தும் தங்கள் பொழுதை கழித்தனர். கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பல மணி நேரம் அருவியில் குளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் குடிபோதையில் அணைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அணைக்கு வருபவர்கள் மது பாட்டில்களை கொண்டு செல்கின்றனரா? என தீவிர சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர். கொடிவேரி அணைக்கு 500க்கும் மேற்பட்ட கார், வேன் போன்ற வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளால் கொடிவேரி பிரிவில் இருந்து அணை வரையிலும், பெரிய கொடிவேரியில் இருந்து அணை வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்: அண்ணாமலை பேச்சு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது

புதுச்சேரி ஊசுட்டேரிக்கு படையெடுத்துள்ள ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள்