இத்தாலி ஓபன் டென்னிஸ் கரோலினாவை வென்ற அன்னா

ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் சர்வதேச இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா(31வயது, 14வது ரேங்க்), ஹங்கேரி வீராங்கனை அன்னா போன்டர்(25வயது, 48வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் சுற்றில் இரண்டு வீராங்கனைகளும் கடுமையாக போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. முடிவில், அந்த சுற்றை அன்னா 7-6(7-5) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 2வது சுற்றில் முன்னணி வீராங்கனை கரோலினா தடுமாறினார். அதனை சாதகமாக்கிய அன்னா, அந்த சுற்றையும் 6-2 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். எனவே ஒரு மணி 23 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் அன்னா 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இத்தாலியன் ஓபனில் அன்னா முதல்முறையாக விளையாடுகிறார். கூடவே டபிள்யூடிஏ போட்டி ஒன்றில் 3வது சுற்றுக்கு முன்னேறுவதும் இதுவே முதல் முறையாகும். மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா(33வது வயது, 17வது ரேங்க்), அமெரிக்காவின் ஸ்ேலான் ஸ்டீபன்ஸ்(30வயது, 36வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் அசரென்கா ஒரு மணி 42நிமிடங்கள் விளையாடி 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த 2வது சுற்று ஆட்டங்களில் சீனாவின் சியூ வாங்(22வயது, 75வது ரேங்க்), 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் ஐரினா கமிலாவையும்(32வயது, 27வது ரேங்க்), ரஷ்யாவின் வெரோனிகா (26வயது, 5வது ரேங்க்) 2-0 எனற நேர் செட்களில் ஸ்பெயினின் நுரியா டியாசையும்( 31வயது, 80வது ரேங்க்) வென்று 3வது சுற்றில் விளையாட உள்ளனர்.

Related posts

இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது

எஸ்.ஐ.க்கு ‘பளார்’ விட்ட பாஜ கவுன்சிலர் கைது

கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது