குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதிகளில் புதர்மண்டி காணப்படும் சீமை கருவேல மரங்கள்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

குன்றத்தூர்: குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன. அதனை உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குன்றத்தூர், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் புதர் மண்டிக்காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய தென் அமெரிக்கா நாட்டை தாயகமாகக் கொண்ட சீமை கருவேல மரங்கள், இந்தியாவில் 1870ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. பின்னர், 1950-60ம் ஆண்டுகளில் பயிர்களை பாதுகாக்க வேலி கரையோரங்களிலும், விறகிற்காகவும் அவற்றின் விதைகள் தூவப்பட்டன.

பின்னர், தான் அவற்றின் தீமைகள் படிப்படியாக அரசாங்கத்திற்கு தெரியவந்தது. இந்த சீமை கருவேல மரங்கள் தங்களது வேர்களை நிலத்திற்கு கீழ் 40 அடி வரை பரவச் செய்து, நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதனால், சீமை கருவேல மரங்கள் வளரும் இடம் தண்ணீர் வற்றிப்போய், விரைவிலேயே தரிசு நிலமாக மாறுகிறது. நிலத்தில் தண்ணீரே இல்லையென்றாலும் கூட, காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி தனது இலைகள் வாடாமல் பார்த்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, சீமை கருவேல மரங்கள் வளரும் இடத்தின் அருகே வசிக்கும் மனிதர்கள் உடலில் இருந்து ஈரப்பதத்தை மட்டுமின்றி, எண்ணெய் பசையை கூட உறிந்து விடும் தன்மை உடையது. இதனாலேயே, இதன் அருகில் வசிக்கும் மனிதர்களின் தோல்கள் சுருங்கி, எப்பொழுதும் வறண்ட நிலையில் காணப்படும்.

இதனை தாமதமாக உணர்ந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலை நாடுகள் தற்போது தங்களது நாடுகளில் இருந்து இதனை முழுவதுமாக அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நமது நாட்டிலும் கூட, உயர்நீதிமன்றம் சீமை கருவேல மரங்களின் தீமையை அறிந்து, அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த 2013ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் இடத்தை, இந்த சீமை கருவேல மரங்களே ஆக்கிரமித்து உள்ளதால், அவற்றை அகற்றுவதற்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்குப்பிறகு பல்வேறு ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில், சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்க முனைப்பு காட்டி வந்தநிலையில், தற்போது நாம் அலட்சியமாக இருப்பதன் காரணமாக மீண்டும் சீமை கருவேல மரங்கள் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள குன்றத்தூர், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளிலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து, புதர்போல் காட்சியளிக்கின்றன. இதனால், அப்பகுதிகளில் விரைவிலேயே நிலத்தடி நீர் வற்றிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மற்ற மரங்களைபோல் அல்லாமல் சீமை கருவேல மரங்கள் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடுவதால், காற்றின் வெப்பநிலை கூடி, காற்று மாசும் ஏற்படுகிறது. எனவே, எதிர்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு, சீமை கருவேல மரங்கள் மூலம் ஏற்படும் பல்வேறு ஆபத்துக்கள் குறித்து மக்களிடையே அரசு போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், தற்போது வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மென்மேலும் பரவி பெரிய அளவில் வளரும் முன், அரசு அவற்றை வேரோடு பிடுங்கி, வர இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலை சீர்கேடு போன்ற பேராபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பிரதமர் மோடியின் பேச்சில் 7 பொய்கள்… உரையில் ‘எருமை’ என கூற மறந்துவிட்டார் : ப.சிதம்பரம் கடும் தாக்கு!!

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் புழல் சிறையில் அடைப்பு!!

ஸ்வாதி மலிவால் விவகாரம்: ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியீடு