சென்னை விமான நிலைய ஊழியர் கொலையில் தொடரும் மர்மம் உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப்பட்டதா என விசாரணை: பெண்ணின் முரணான பதிலால் போலீசார் குழப்பம்

திருப்போரூர்: சென்னை விமானநிலைய ஊழியர் கொலையில் மர்மம் தொடர்கிறது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் புதைக்கப்பட்டதா அல்லது எரிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. இதில் பெண்ணின் முரணான பதிலால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர், என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் தனது சகோதரி ஜெயகிருபா என்பவரின் வீட்டில் தங்கியபடி சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து விமான நிறுவனத்தில் ப்ளோர் மெயின்டனன்ஸ் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மதியம் பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்வதாக தனது சகோதரியிடம் ஜெயந்தன் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து பழவந்தாங்கல் போலீசில் ெஜயகிருபா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தனின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த செம்மாளம்பட்டி கிராமத்தில் கடைசியாக பேசியதுபோல் சிக்னல் காட்டியது. அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை ஜெயந்தன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பாக்கியலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரிடம் ஜெயந்தன் குறித்து கேட்டுள்ளனர். அப்போது பாக்கியலட்சுமி போலீசாரிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். காணாமல் போன ஜெயந்தன், சென்னை விமான நிலையத்தில் வேலை செய்தபோது நண்பர் ஒருவர் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாக்கியலட்சுமியுடன் பழக்கமாகி உள்ளார்.

அவர் மீதான ஈர்ப்பால் விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோயிலில் வைத்து, பாக்கியலட்சுமியை ஜெயந்தன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் 2021ம் ஆண்டே பிரிந்து விட்டனர். இதனிடையே கடந்த 19ம் தேதி பாக்கியலட்சுமிக்கு போன் செய்த ஜெயந்தன், அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அவரது வீடு உள்ள செம்மாளம்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளார். பாக்கியலட்சுமி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறித்து ஜெயந்தனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று இரவு அங்கேயே ஜெயந்தன் தங்கி உள்ளார்.

ஜெயந்தன் தூக்கத்தில் இருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் சங்கர் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தனைக் கொன்ற பாக்கியலட்சுமி, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து வைத்தார். பின்னர் கை மற்றும் கால்களை மட்டும் தனியாக எடுத்து பாலீதீன் கவரில் சுற்றி 20ம் தேதி பகல் 11 மணிக்கு சென்னை அருகே கோவளத்திற்கு வந்து, அங்குள்ள தனது நண்பரும் பூமிநாதசுவாமி கோயில் பூசாரியுமான வேல்முருகன் என்பவரின் உதவியுடன் கோவளம் கடற்கரை அருகே உடல் பாகங்களை புதைத்துள்ளார். பின்னர் 26ம் தேதி மீண்டும் புதுக்கோட்டையில் இருந்து தலை மற்றும் வயிறு ஆகிய பாகங்களை மற்றொரு பாலீதீன் கவரில் சுற்றி, சூட்கேசில் வைத்து வாடகை கார் மூலம் கேளம்பாக்கம் வந்து, பின்னர் மீண்டும் வேல்முருகனை தொடர்பு கொண்டு அவர் மூலமாக கோவளம் கழிவெளி பகுதியில் பாகங்களை புதைத்ததாக போலீசாரிடம் பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமியின் இந்த தகவல்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கொலை நடந்த புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை போலீசாரும், பழவந்தாங்கல் போலீசாரும் பாக்கியலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து புனித தோமையார் மலை உதவி ஆணையர் அமீர்அகமது தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் கோவளம் வந்து கோயில் பூசாரி வேல்முருகனிடம் விசாரணை நடத்தினர். அவர் பாக்கியலட்சுமி வந்தது உண்மை என்றும், ஆனால் அவர் எந்த கொலையும் செய்து, எந்த உடலையும் புதைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் தனது கணவர் இறந்து விட்டதாகவும், அவரது அஸ்தியை கோவளம் கடலில் கரைத்ததாகவும் பாக்கியலட்சுமி கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த போலீசார் மீண்டும் பாக்கியலட்சுமியை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே ஜெயந்தன் கொலை செய்யப்பட்டது எப்படி, அவரது உடல் புதைக்கப்பட்டதா அல்லது எரித்து அஸ்தி கரைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ேபாலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வர தாமதமாவதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே ஜெயந்தன் உடல் புதைக்கப்பட்ட இடம் எது என்பது தெரிய வரும் என்றும், பிறகு உடலை தோண்டி எடுக்கும் பணிகள் நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு