குஜராத்தில் உலகளாவிய மாநாடு தொடக்கம் உலக வளர்ச்சியின் இயந்திரம் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

காந்திநகர்: குஜராத்தில் உலகளாவிய உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாகவும், நம்பகமான நண்பனாகவும், ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகவும் இந்தியாவை உலக நாடுகள் பார்க்கின்றன’ எனக் கூறினார். குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் 10வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உலகின் முன்னணி நிறுவன தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகம் இந்தியாவை, ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகவும், நம்பகமான நண்பனாகவும், மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட கூட்டாளியாகவும், உலகளாவிய நன்மைக்கான தெற்கின் குரலாகவும், திறமையான இளைஞர்களுடன் தீர்வுகளை கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையமாகவும், ஜனநாயக நாடாகவும், உலக பொருளாதார வளர்ச்சியை இயக்கும் இயந்திரமாகவும் பார்க்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும் என அனைத்து முக்கிய மதிப்பீட்டு நிறுவனங்களும் கணித்துள்ளன. இதை நாடு நிச்சயம் அடையும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

நம்மால் பொதுவான இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைய முடியும் என்ற உறுதியை இந்தியா உலகிற்கு நிரூபித்து காட்டி உள்ளது. உலக நலனுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு, விசுவாசம், முயற்சிகள், கடின உழைப்பு ஆகியவை இன்றைய உலகை மிகவும் பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் ஆக்குகின்றன. பல நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் உலகின் புதிய நம்பிக்கை ஒளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு அமிர்த காலம். அதற்காக இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* 2027-2028ம் ஆண்டில் 3ம் இடம் பிடிப்போம்
மாநாட்டில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘2027-28ம் நிதியாண்டில் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். அப்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டும். 2047ம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் இலக்கை இந்தியா எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023 வரையிலான 23 ஆண்டுகளில் இந்தியா 919 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. இதில் 65 சதவீதம், அதாவது 595 பில்லியன் டாலர் கடந்த 9 ஆண்டு பாஜ ஆட்சியில் வந்துள்ளது. 2014ல் 15 கோடியாக இருந்த வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை தற்போது 50 கோடியாக அதிகரித்துள்ளது’’ என்றார்.

* அம்பானி, அதானி புகழாரம்
மாநாட்டில் பல்வேறு தொழில் துறை தலைவர்கள் பேசினர். இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி பேசுகையில், ‘‘பிரதமர் மோடியின் மகத்தான லட்சியங்கள், துல்லியமான நிர்வாகம், குறைபாடற்ற செயலாக்கத்தின் கீழ் உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைக்க இந்தியா தயாராக உள்ளது. குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் அதானி குழுமம் முதலீடு செய்யும். இதன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்’’ என்றார்.

ரிலையன்ஸ் குழுமதலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், ‘‘குஜராத்தை பூர்வீகமாக கொண்டிருப்பதை பெருமையாக கருதுகிறேன். இங்கு ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் நவீன காலத்தின் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் மோடிதான். இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் மோடி. உலகமே அவரைப் பாராட்டுகிறது. சாத்தியமற்றதை அவர் சாத்தியமாக்குகிறார். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’’ என்றார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்