வீட்டில் புதையல் இருப்பதாக கூறி அரியலூர் பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: தலைமறைவான சாமியார் மனைவியுடன் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது 2வது மனைவி ஜூலி (48). கணவர் மற்றும் அவரது முதல் மனைவி இறந்து விட்டனர். இந்நிலையில், முதல் மனைவிக்கு பிறந்த மகன்களுடன் ஜூலி வசித்து வருகிறார். அதில் ஒருவருக்கு 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது. மகனை குணப்படுத்த அருகில் உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மூலம் திண்டிவனத்தை சேர்ந்த கொல்லிமலை சித்தர் தியாகம் டேனியல் என்பவரை உறவினர்களுடன் ஜூலி சந்தித்துள்ளார்.

அதற்கு தியாகம் டேனியல், ‘உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளார்கள், அதனை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, தியாகம் டேனியல் (62) அவரது மனைவி தீபா ஜெனிபர் (43) ஆகியோர் ஜூலியின் வீட்டிற்கு வந்து பூஜை செய்து 3 அடி ஆழம் தோண்டி, ஒரு செப்பு தகடு எடுத்து காண்பித்தனர். மேலும், 8 அடி ஆழத்திற்கு கீழே புதையல் உள்ளது என்று ஆசை வார்த்தை கூறியும், அதை எடுக்காவிட்டால் நீ இறந்து விடுவாய், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பயமுறுத்தி 15 நாட்கள் பழனிச்சாமி வீட்டில் தங்கி ஜூலி வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர்.

இதற்காக பழனிச்சாமி, ஜூலியிடம் வங்கி மூலமாகவும் நேரடியாகவும் பலமுறையாக மொத்தம் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். எந்த வித புதையலும் எடுத்து தராத நிலையில் 25 லட்சம் பணம் குறித்து பழனிச்சாமி, தியாகம் டேனியலிடம் ஜூலி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘கோபமாக பேசினால் புதையல் எடுக்க உன்னை நரபலி கொடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று மிரட்டி உள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலி, மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் பிரிவில் 2021ல் புகார் அளித்தார்.

இதனைடுத்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தலைமறைவான தியாகம் டேனியல் மற்றும் தீபாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் திண்டிவனம் அருகே போலீசார் கைது செய்தனர்.

Related posts

ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல்

திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தல்: சென்னை கணவர் புகார்

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்