அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கிறார்!!

சென்னை:ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவி வந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தார். இதனால் எடப்பாடி – ஓ.பன்னீர்செல்வம் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை இழந்தார். இதைத்தொடர்ந்து கட்சி பதவியை கைப்பற்ற, ஒற்றைத் தலைமை அதாவது மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி போர்க்கொடி தூக்கினார். கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே நீட்டிக்க வேண்டும் என்று கூறினார்.ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிமுக பொதுக்குழுவை கூட்டி, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ெகாண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக கட்சியில் இருந்து நீக்கினர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டனர். ஆனாலும், நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதன்மூலம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கட்சியும் எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் மக்கள் மன்றத்துக்கு சென்று நியாயம் கேட்கப்போவதாக அறிவித்துள்ளார். அதன்படி திருச்சியில், நாளை மறுதினம் (24ம் தேதி) மிகப்பெரிய அளவில் மாநாடு நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அந்த மாநாட்டில் தனது அடுத்தக்கட்ட நிலையை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக கட்சியின் வளர்ச்சி பணிகளில் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

அதேநேரம், வருகின்ற 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சியில் இடம்பெற வேண்டும் என்றும் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். முக்கியமாக, தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுடன் வருகின்ற தேர்தலிலும் கூட்டணியை ஏற்படுத்த எடப்பாடி திட்டமிட்டுள்ளார். ஆனால், அதிமுகவின் தற்போதைய பின்னடைவை கருத்தில் கொண்டு, தமிழக பாஜ தலைமை அதிக இடங்களை அதிமுகவிடம் இருந்து பெற காய் நகர்த்தி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி வருகிற 26ம் தேதி (புதன்) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லி செல்லும் அவர், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரும் டெல்லி பாஜவின் மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். கடந்த சிலமுறை எடப்பாடி டெல்லி சென்றபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க முடியாமல் திரும்பி வந்தார். அதேபோன்று தமிழகம் வந்த மோடி, அமித்ஷாவை எடப்பாடி சந்தித்து பேச நேரம் கேட்டார். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதன்முறையாக எடப்பாடி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது அமித்ஷாவை சந்தித்து பேசி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணியை உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, தற்போது நடைபெறும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இந்த பிரச்னை குறித்தும் அமித்ஷாவிடம் எடப்பாடி பேச திட்டமிட்டுள்ளார். காரணம், கர்நாடகாவில் பாஜக தற்போது ஆளுங்கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு எதிராகவே எடப்பாடி வேட்பாளரை நிறுத்தி உள்ளார். இதனால் இரண்டு கட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபற்றியும் அமித்ஷாவிடம் எடப்பாடி பேசி, அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related posts

ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன்: கேரள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி விளக்கம்

வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி

பீகாரில் ரூ.1,500-க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ,2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த 5 பேர் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி