சமயம் பார்த்து பிரசாரத்திற்கு போகாத மாஜி பெண் அமைச்சரை எச்சரித்த வேட்பாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்யவே தாமரை தரப்பு வேட்பாளர் தயக்கம் காட்டுகிறாராமே..’’ என முதல் கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட தாமரை கட்சி வேட்பாளர் கடைசியில் முடியக்கூடிய கோவிந்துக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் வசித்து வரும் பகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும்னு வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகள் முதல் நாளே தகவல் தெரிவிச்சாங்களாம்.. ஆனா, தயக்கம் காட்டிய வேட்பாளர், இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி, அதுவும் ரம்ஜான் பண்டிகை விடுமுறைக்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து இருப்பாங்க.. இந்த நேரத்தில் வாக்கு சேகரிக்க சென்றால் கண்டிப்பாக எதிர்ப்பு அலை நமக்கு இருக்கக்கூடும். இதனால, இஸ்லாமியர்கள் இல்லாத பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்கலாம்னு முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டுக்கிட்டாராம்.. இதைக் கேட்டு வேட்பாளர் மீது உச்சகட்ட டென்சனுக்கு சென்ற நிர்வாகிகள், ரம்ஜான் விடுமுறைக்கு வெளியூர் இஸ்லாமியர்கள் வந்து இருப்பதால் மற்ற வேட்பாளர்கள் முக்கிய இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுட்டு போயிருக்காங்க.. தாமரை கட்சி வேட்பாளர் முக்கிய இஸ்லாமிய பிரமுகர்களை சந்திக்காம இருந்தால் இலைக்கட்சி நிர்வாகிகள் நக்கல் அடிப்பாங்க… வெளியூர் செல்லும் முன்னால கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அவங்களை சந்தித்து விட வேண்டும். அப்படி போய் சந்திச்சா எதிர்ப்பு எதுவும் இருக்காதுனு வேட்பாளரிடம் கறாராக தெரிவிச்சிருக்காங்களாம்.. இருந்தாலும் வேட்பாளர் தயக்கத்துடனே இன்னும் இருக்கிறாராம்…என்றார் விக்கியானந்தா.
‘‘துறைக்கு செலுத்த வேண்டிய வாடகையும் வரலையாம், குத்தகை பணமும் வரலையாமே..’’ என்ன கதை தெரியுமா? எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் ‘செ’ என்று தொடங்கி ‘கம்’ என்று முடியுற நகரத்துல, அறநிலையத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த துறைக்கு சொந்தமான பிரதான கோயில் இருக்குது. கோயிலுக்கு சொந்தமாக கடையும், நிலமும் குத்தகைக்கும், வாடகைக்கும் விட்டிருக்குறாங்களாம்.. இதுல, குத்தகைகாரங்க, கடைக்காரங்க கிட்ட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிங்க முறையா குத்தகை பணத்தையும், வாடகையையும் வசூல் செஞ்சி கவர்மென்ட்டுக்கு கொடுக்குறதில்லைன்னு குற்றச்சாட்டு எழுந்திருக்குது.. இதேபோல பல கோயில்களுக்கு சொந்தமாக உள்ள நிலங்களும், வாடகையும் சரியா வசூல் செய்யப்படுறதில்லைன்னு சமூக ஆர்வலர்கள் புகார் சொல்றாங்க.. இதனால, தொகை செலுத்த வேண்டியவங்களே இன்னும் செலுத்தவில்லையா அல்லது அதிகாரிகள் இன்னும் செலுத்தவில்லையான்னு ஆய்வு செஞ்சி நடவடிக்கை எடுக்கணும்னு ஆன்மிகவாதிகளிடமிருந்து கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓய்வுங்கிற பேர்ல சமயம் பார்த்து பழிவாங்கும் மாஜி பெண் அமைச்சருக்கு வேட்பாளர் டோஸ் விட்டாராமே.. அதைப்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி தேஜ கூட்டணி அரசில் அமைச்சர் பதவி வகித்த பெண் அமைச்சரின் பதவியை புல்லட்சாமி அதிரடியாக பறித்தார். ஏன் பறித்தார், எதற்காக பறித்தார் என 2 மாதம் புதுச்சேரி எங்கும் இதே பேச்சாக இருந்துச்சி.. இந்த பேச்சு அடங்குவதற்குள் கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் என செய்திகளில் பரபரப்பாக இருந்து வந்தார் மாஜி பெண் அமைச்சர்.. இதற்கிடையே காரைக்கால் நெடுங்காடு பகுதியில் சிவமானவருக்கு ஓட்டு கேட்டு மாஜி பெண் அமைச்சர் நிலவு பிரசாரத்தில் ஈடுபட்டாராம்… அப்போது வெயிலின் தாக்கத்தால் திடீரென மயங்கி விழுந்துட்டாராம்.. பின்னர் மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனையின்பேரில் ஓய்வெடுத்து வருகிறாராம்.. இந்த சூழலில் கடந்த தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்டவரை பாஜ கட்சியில் சேர்த்துக்கொண்டது அவருக்கு பிடிக்கவில்லையாம்.. சம்பந்தப்பட்ட நபரை பாஜ பிரசார வேனில் ஏற்றியதும், அங்கிருந்த நிர்வாகிகளிடம் பிரச்னை செய்துள்ளார். உடனடியாக அவர் பிரசார வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்டாராம்.. பழைய சம்பவங்களையும், தனக்கு எதிரானவர்களை வளர்க்கும் நடவடிக்கைகளையும் பார்த்து பாஜவை பழிவாங்க நிலவு முடிவெடுத்துவிட்டாராம்.. இதனால் பிரசாரம், ஓட்டு கேட்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கிட்டாராம்.. கேட்டால் மருத்துவர் ஓய்வெடுக்குமாறு கூறியிருக்கிறார்னு ஒதுங்கியுள்ளார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ வேட்பாளர் சிவமானவர், போனை போட்டு, ஏம்மா… இதுதான் டைம் என்று பழிவாங்குறியா என கேட்க, இல்லை, மருத்துவர் ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார்னு நிலவு சொல்ல.. டென்ஷன் ஆன பாஜ வேட்பாளர் சிவமானவர், அந்த மருத்துவர் யார், என்ன சொன்னார் என தெரியும்.. இந்த வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க.. நீங்க வேலை செய்யாவிட்டால், யாரை வைத்து வேலை செய்ய வேண்டும்னு எனக்கு தெரியும். அடுத்த முறை உங்களுக்கு சீட் இருக்குதானு பாத்துக்கலாம் எனக்கூறி இணைப்பை துண்டித்து விட்டாராம்.. இதுதான் இப்போது புதுவையில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு: முதல்வருக்கு குடும்பத்தினர் நன்றி