மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்

நாகை: மீன்பிடி தடைகாலம் 20 நாட்களை எட்டி உள்ளது. நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் ரூ.120 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதித்துள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கிழக்கு கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிப்பது வழக்கம். அதன்படி கடந்த 14ம் தேதி நள்ளிரவு முதல் மீன் பிடி தடைகாலம் துவங்கி உள்ளது.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கல்லார், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆற்காட்டுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 740 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 450 விசைபடகுகள், தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 150 விசை படகுகள் மற்றும் காரைக்காலிலும் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

தடை காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். படகுகளை கடலிலிருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கரைக்கு கொண்டு வந்து பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. படகை தூய்மை செய்தல், வர்ணம் பூசுதல், இன்ஜின் பழுது பார்த்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஐஸ் வியாபாரம், மீன் ஏற்றுமதி என ஒரு நாளைக்கு தஞ்சை, நாகையில் தலா ரூ.2 கோடி, புதுக்கோட்டை, காரைக்காலில் தலா ரூ.1 கோடி வர்த்தகம் நடைபெறும். அதன்படி ஏப்ரல் 15 முதல் இன்று வரை 20 நாட்களில் ரூ.120 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் 9,000, தஞ்சையில் 2000, புதுக்கோட்டையில் 4,000 பேர் என 15,000 மீனவர்கள் வேலையிழந்துள்ளோம். மீன்பிடி தொழில் சார்ந்த ஐஸ்கட்டி தயாரிப்பு, கருவாடு தயார் செய்தல், உப்பு விற்பனை என 5 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தமிழக அரசு ரூ.8,000 வழங்கி வருகிறது. எனவே தடை கால நிவராண தொகையாக அரசு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

Related posts

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி

வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

வேலூரில் போலீசார் அதிரடி வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 3 பேர் கைது