மீன்பிடி தடைக்காலம் ஏப். 15 முதல் துவக்கம்: 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி முதல் துவங்குகிறது. தடைக்காலம் துவங்கும் முன்பே ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தி விட்டனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் வெவ்வேறு மாதங்களில் மீன்பிடி தடை காலத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. இக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகள் மட்டும் மீன் பிடிக்க செல்லலாம். தமிழக கடல் பகுதியில் ஏப். 15ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை 60 நாட்கள் மீன் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுகிறது.

இந்த 2 மாதம் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை உள்ளது. இதனால் தூத்துக்குடி முதல் சென்னை வரையுள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் அனைத்து படகுகளிலும் பழுது நீக்கும் பணி நடைபெறும். இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் துவங்கும் முன்பே, ராமேஸ்வரம் மீனவர்கள் பழுது நீக்கும் பணிக்காக தங்களது படகுகளை கரையேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்வரத்து குறைவு மற்றும் இலங்கை கடற்படை அச்சுறுத்தலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 1,500 விசைப்படகுகள் கரை நிறுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்படும். படகுகள் கடலுக்கு செல்லாததால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பார்கள். மீன் அள்ளும் கூலிகள், சிறு வியாபாரிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரோட்டில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு!

சப்பாத்திக்குள் சில சங்கதிகள்!

கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு!