சப்பாத்திக்குள் சில சங்கதிகள்!

உலகம் முழுக்க உள்ள சாப்பாட்டுப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் சப்பாத்திக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தியாவைப் பொருத்தவரை சப்பாத்தி ஒரு வட இந்திய உணவு என்றே பார்க்கப்பட்டது. மும்பை, டெல்லி போன்ற வட இந்தியப் பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள்தான் தங்கள் வீடுகளில் சப்பாத்தியை சமைத்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய தேதியில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவாக மாறி இருக்கிறது சப்பாத்தி. இட்லி, தோசை உள்ளிட்ட டிபன் வகைகளைச் செய்பவர்கள் வாரத்தில் 2 நாளாவது சப்பாத்திக்கு மாறி விடுகிறார்கள்.

தினமும் சப்பாத்திதான் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். பிடிக்கிறதோ, இல்லையோ! சுகர் இருக்கிறது, அதனால் சப்பாத்தி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என சப்பாத்தி சங்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக செட்டில் ஆனவர்களும் இருக்கிறார்கள். மதிய உணவாக அரிசிச் சோற்றைச் சாப்பிட்டாலும், அதில் ஒரு பகுதியாக சப்பாத்தியைச் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இதனால்தான் பல ஓட்டல்களில் மீல்ஸ் காம்போவில் சப்பாத்தியையும் சேர்த்து வழங்குகிறார்கள்.

இத்தகைய ஆல்டைம் பேவரைட்டான சப்பாத்தியைப் பற்றி மேலும் சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்துகொள்வோம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின்போது உருவானதுதான் சப்பாத்தி என ஒரு கருத்து நிலவுகிறது. மொஹஞ்சதாரோவில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது கோதுமை தானியங்களும் கிடைத்திருக்கின்றன. அந்த தானியங்களை ஆராய்ந்தபோது, அவை இன்றளவிலும் இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு கோதுமை வகையை ஒத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

சப்பாத்தி கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்து, பின்னர் இந்தியாவுக்கு வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இருந்தபோதும் நமது தென்னிந்தியாவில் இருந்துதான் சப்பாத்தி உருவாகி பல இடங்களுக்கு சென்றிருக்கிறது என பல அடித்துக்கூறப்படுகிறது. இதற்கு வலுவான சான்றுகளும் இருக்கின்றன. பழங்கால சமஸ்கிருத உரையில் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சப்பாத்தி இங்கு ஓர் உணவாக இருந்ததாகவும், 1556ம் ஆண்டில் அக்பர் மன்னருக்கு இந்த உணவு மிகவும் பிடித்தது என்றும் கூறப்படுகிறது.அந்த காலகட்டத்தில் ​​இந்தியாவில் விவசாயம்தான் பிரதான ெதாழில். விவசாயம் பல தரப்பினரால் பரவலாகவும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இந்திய மக்கள் கோதுமை மற்றும் பிற உலர் உணவுப் பொருட்களை அதிகளவில் பயிரிட்டு வளர்த்தனர். அப்போது அதிகளவில் பயிரிடப்பட்ட தினை மற்றும் பிற தானியங்களை அரைத்து தண்ணீரில் கலந்து ஓர் சுவையான உணவை உருவாக்கி இருக்கிறார்கள். அது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஒரு வித்தியாசமான சுவையையும் கொடுத்திருக்கிறது. அதன்பிறகு கோதுமையில் இருந்து கிடைக்கும் மாவு ஒரு அருமையான சுவையைக் கொடுத்திருக்கிறது. இதனால் பலரும் கோதுமையை அரைத்து, அந்த மாவில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சுவையான சப்பாத்தியை உருவாக்கி சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் இருந்து கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி வெகு பிரபலம் ஆகியிருக்கிறது. சப்பாத் என்றால் இந்தியில் தட்டை என்று அர்த்தம்.

கோதுமை மாவை உருட்டி தட்டையாக்கி செய்யும் உணவு என்பதால் இதற்கு சப்பாத்தி என பெயர் வந்ததாக கூறுகிறார்கள். மாவை தயார் செய்துவிட்டு, உருட்டி உடனே தயார் செய்து விடலாம். இந்த மிக எளிதான தயாரிப்பு முறையும் அனைவருக்கும் சப்பாத்தி பிடித்துப்போனதற்கு ஒர் காரணமாக இருக்கிறது. பயணத்திற்கு மிக தோதானது. வெறும் மாவை எடுத்துச் சென்றால் போதும். விறகடுப்பில் வெறுமனே வாட்டி எடுத்துக்கூட சாப்பிடலாம். வசதி இருந்தால் கிரேவி செய்யலாம். இல்லையென்றால் வெறும் வாயிலேயே சாப்பிட்டு விடலாம். இதனால்தான் பல வட இந்தியர்களுக்கு இது இன்றியமையாத உணவாக இருக்கிறது. பணி நிமித்தமாகவோ, சுற்றுலாவுக்கோ சென்றால் சப்பாத்திதான் அவர்களுக்கு சாப்பாட்டுக்கான சாய்ஸ்.

அதேபோல வெஜ், நான் வெஜ் என எதனோடும் இதை ஜோடி சேர்த்துக்கொள்ளலாம். வெறும் வெங்காயத்தை நிரப்பிக்கூட சாப்பிடலாம். உருளைக்கிழங்கை அவித்து மசாலா சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் இந்த உணவு வெகு விரைவில் ஒரு தெற்காசிய உணவுப் பொருளாக மாறியது.1857ம் ஆண்டில் நடந்த சுதந்திரப் போரின்போது சப்பாத்தி ஆங்கிலேயர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. ராணுவ சாப்பாட்டு அரங்குகளில் வீரர்கள் விரும்பி சாப்பிட்டது சப்பாத்தியைத்தான். பிரிட்டிஷ் வீரர்கள் சாப்பிடுவதற்கு அமரும்போதெல்லாம் சப்பாத்தியால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கிறார்கள். அதேபோல அவர்கள் அரிசிச் சோற்றையும் விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார்கள். பின்னர் பல நாடுகளுக்கும் சப்பாத்தியின் புகழ் பரவி நிலைத்துவிட்டது.

இன்று இந்தியர்கள் மட்டுமின்றி பல நாட்டினரும் சப்பாத்தி விரும்பிகளாகி இருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று குடியேறியபோது தங்களது சப்பாத்தி உணவையும் சேர்த்தே கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு வேறு பல உணவுகள் கிடைத்தாலும் சப்பாத்திதான் நிறைவைக் கொடுக்கிறது. இன்று உலகளவில் ஆசிய சமையல் முறை மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது. அதற்கு விதம் விதமான சப்பாத்தியும் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு நாட்டினரும் தாங்கள் விரும்பி உண்ணும் காய்கறிகள், இறைச்சி வகைகளுடன் சப்பாத்தியை மெயின் உணவாக வைத்துக்கொள்கிறார்கள்.

இதைக் கொண்டு பல புதிய உணவு வகைகளையும் உருவாக்கி வருகிறார்கள். உலகளவில் ஓட்டல்கள் மட்டுமின்றி ஷாப்பிங் மால்களில் விற்பனை செய்யக்கூடிய உணவாகவும் சப்பாத்தி மாறி இருக்கிறது. சாதாரண கடைகள் முதல் பெரிய மால்கள் வரை ரெடிமேட் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதை இப்போது பல நிறுவனங்கள் தயாரித்து தங்களது பிராண்ட் பெயரிலேயே விற்பனையைத் துவக்கி இருக்கின்றன. அதேபோல ஆன்லைனிலும் பதியப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆதி காலம் முதல் இப்போதைய ஆண்ட்ராய்டு காலம் வரை சப்பாத்தி தன்னை மேம்படுத்தியபடியே வளர்ந்துகொண்டிருக்கிறது.

இவ்ளோ ரகம் இருக்கு!

சப்பாத்தியில் பொதுவாக கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் எல்லா தரப்பு மக்களும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் பெரும்பாலும் வீட்டில் கோதுமை சப்பாத்தியைத்தான் சாப்பிடுவோம். இதற்கு காம்பினேஷனாக உருளைக்கிழங்கு குருமா, சிக்கன் அல்லது மட்டன் குருமாவைச் சேர்த்துக் கொள்கிறோம். வெறித்தனமான சப்பாத்தி பிரியர்களுக்கு காரச்சட்னி, கடலை, தேங்காய் சட்னி இருந்தாலே போதும். அப்படியே லபக்கென்று உள்ளே தள்ளி விடுவார்கள். கோதுமை சப்பாத்தி மட்டுமில்லாமல் பனீர் சப்பாத்தி, காலிபிளவர் கேரட் சப்பாத்தி, சப்பாத்திக்குள் உருளைகிழங்கை ஸ்டப் செய்து சாப்பிடும் ஆலு சப்பாத்தி, வட மாநிலத்தில் சப்பாத்தியை நேரடியாக தீயில் வாட்டி சாப்பிடும் புல்கா என பல வகைகளில் சப்பாத்தி சாப்பிடப்படுகிறது. பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், கரம் மசாலாத்தூள் கலந்த மசாலா சப்பாத்தி, அவகோடா பழத்தில் தயார் செய்யப்படும் அவகோடா சப்பாத்தி என வேறு ரக சப்பாத்திகளும் இருக்கின்றன.

 

Related posts

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி