டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

திருவாரூர்: ‘டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். திருவாரூர், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து ரயிலில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கும்பகோணம் வந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளரும், எம்பியுமான கல்யாண சுந்தரம் தலைமையில் அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் அன்பழகன், துரை சந்திரசேகரன், பூண்டி கலைவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் குடந்தையில் தனியார் ஓட்டலில் தங்கினார். காலை 10 மணி அளவில் காரில் புறப்பட்டு திருவாரூர் சென்றார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் ஒருபோதும் நிலக்கரி எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுக்க மாட்டார். இது தொடர்பாக அவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நாளை (இன்று) நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ. ராஜா கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளார்’ என்றார்.

பின்னர், திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த கலைஞரின் நண்பரும், முன்னாள் நகராட்சி தலைவருமான தென்னனின் 100 வது பிறந்தநாள் விழா, முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மறைந்த முன்னாள் எம்எல்ஏ சித்தமல்லி சோமசுந்தரத்தின் படத்திறப்பு ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்றார். விழா முடிந்ததும் அவர் காரில் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு சங்கம் ஓட்டலில் தங்கினார். மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் தஞ்சாவூர் வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியை சேர்ந்த மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார்.

Related posts

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு