எம்எல்ஏ மகனுக்கு மகளை கட்டி வைக்கிறேன்… விவசாயியிடம் ₹20 லட்சம் சுருட்டிய திருமண புரோக்கர் கடத்தி சித்ரவதை: கட்டிப்போட்டு விடிய விடிய தாக்கிய வாலிபர் கைது

சேலம்: எம்எல்ஏ வீட்டில் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி விவசாயியிடம் ₹20 லட்சம் சுருட்டிய புரோக்கரை காரில் கடத்தி சென்று சரமாரி தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசிக நிர்வாகி உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள தியாகனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவர், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க திருமண புரோக்கரான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கைகளத்தூர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து (42) என்பவரை நாடியுள்ளார். அவரும் பல்வேறு இடங்களில் வரன் பார்த்துள்ளார். பின்னர், எம்எல்ஏ ஒருவரது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறிது சிறிதாக ₹20 லட்சம் வரையிலும் பணம் பறித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தலைவாசலுக்கு செல்வதாக மனைவி தெய்வானையிடம் செல்லமுத்து கூறி சென்றுள்ளார். இரவு 7 மணியளவில் ஆத்தூர் புளியங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நண்பர் ராமருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, ஒரு காரில் 6 பேர் கும்பல் வந்திறங்கியது. அவர்கள், செல்லமுத்துவை சரமாரியாக தாக்கி காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். அதனை கண்டு நண்பர் ராமர் அதிர்ச்சிக்குள்ளானார். உடனே செல்லமுத்து மனைவிக்கு தெரியப்படுத்தினார். இதுகுறித்து செல்லமுத்து மனைவி, வீரகனூர் போலீசாரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன், வீரகனூர் எஸ்ஐ மைக்கேல் மற்றும் போலீசார், செல்லமுத்துவை தீவிரமாக தேடினர். இதனிடையே நேற்று அதிகாலை கைகளத்தூர் பகுதியிலேயே அவரை இறக்கி விட்டு விட்டு அக்கும்பல் தப்பி சென்றது. அவரை கை-கால்களை கட்டி காருக்குள் அடைத்து விடிய விடிய சரமாரி தாக்கியிருப்பது தெரியவந்தது. காயமடைந்த செல்லமுத்துவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகம் மகன் மருதமுத்து (27) மற்றும் அவரது கூட்டாளிகளான கெங்கவல்லியை சேர்ந்த கள்ளக்குறிச்சி தொகுதி விசிக துணை செயலாளர் கருப்பையா, ஆணையம்பட்டி ராமர், வலசக்கல்பட்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன், புனல்வாசல் தாமரைச்செல்வன், பாண்டியன் ஆகியோர் கடத்தி சென்று தாக்கியது தெரிய வந்தது. இதன்பேரில், கடத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை மருதமுத்து சிக்கினார். அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், திருமண புரோக்கர் செல்லமுத்து கடத்தப்பட்டதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆறுமுகத்தின் மகளுக்கு செல்லமுத்து மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். அவரிடம், உங்கள் மகள் எம்எஸ்சி, பிஎட். படித்துள்ளார். எனவே, ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டால், தனக்கு தெரிந்த எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடலாம் என செல்லமுத்து ஆசை வார்த்தை கூறியுள்ளார். எம்எல்ஏ மகன் வரனை முடித்து கொடுப்பதாக கூறி முதலில் ₹10 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். தொடர்ந்து ₹3 லட்சம், ₹2 லட்சம் எனவும் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது. அதனை எடுக்க பூஜைகள் செய்ய வேண்டும் என கூறி லட்சக்கணக்கில் செல்லமுத்து பணம் வசூலித்துள்ளார். மொத்தமாக ₹20 லட்சம் வரையிலும் பணம் வாங்கி கொண்டு, ஆறுமுகத்துடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆறுமுகம், கைகளத்தூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து செல்லமுத்துவை தேடினர். மேலும், சொந்த ஊரான தலைவாசல் போலீசிலும் ஆறுமுகம் புகார் கொடுத்தார். இதன்பேரில், செல்லமுத்துவை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், அவர் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், வீரகனூர் வேப்பம்பூண்டியில் நண்பருடன் செல்லமுத்து நிற்பதை பார்த்த ஆறுமுகத்தின் மகன் மருதமுத்து, தனது நண்பர்களுடன் காரில் கடத்தி சென்று விடிய விடிய சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து, கைதான மருதமுத்துவை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விசிக நிர்வாகி கருப்பையா உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை ஆசாமிகள்: விரட்டிய கண்டக்டர்

வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு..!!