அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை ஆசாமிகள்: விரட்டிய கண்டக்டர்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்றிரவு சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தின்மீது கஞ்சா போதை ஆசாமிகள் கல்வீசி தாக்கி, அதன் முன்பக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடினர். அவர்களை கண்டக்டர் விரட்டி பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டெலிபோன் எக்ஸ்சேஞ் சிக்னல் அருகே சிடிஎச் சாலையில் நேற்றிரவு கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகளில் சிலர் வாகன ஓட்டிகளிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மாநகர பேருந்தில் ஏறி, பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரிடம் அடாவடியில் ஈடுபட்டனர். அவர்களை கண்டக்டர் தட்டிக் கேட்டு,பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.

இதில் ஆத்திரத்துடன் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போதை ஆசாமிகளில் சிலர், அப்பேருந்தின் முன்புற கண்ணாடிகளை கல்வீசி தாக்கி அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதை பார்த்ததும் பணியில் இருந்த கண்டக்டர், கஞ்சா போதை ஆசாமிகளை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ பதிவுகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் சிடிஎச் சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார், நெரிசல் நேரங்களில் நின்று, அவ்வழியே செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஏதேனும் காரணங்களை கூறி பணவசூலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுபோன்ற கஞ்சா போதை ஆசாமிகளின் அடாவடி செயல்களை கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related posts

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை

சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்

ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவு