தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலின் வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்?: மாதிரி வாக்குப்பதிவு நடந்தது

திருவனந்தபுரம்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று பரிசோதிக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனால் இந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் மோடி குறித்து அவதூறு பேசியது தொடர்பான வழக்கில் குஜராத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மத்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்த தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வரும் நாட்களில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று கருதப்படுகிறது. இம்முறை இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற பரபரப்பும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related posts

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு..!!

அலையில் சிக்கி காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு..!!