திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு அலுவலகம், ஆதீன குடியிருப்பு கட்ட முடிவு: அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு அலுவலகம் மற்றும் ஆதீன குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலின் ஆதீனம் கடந்த 2012ம் ஆண்டு சித்தியடைந்தார். இதையடுத்து புதிய ஆதீனம் நியமனம் செய்வது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கந்தசுவாமி கோயில் அலுவலகம் இருந்த இடத்தில் அன்னதான கூடம் கட்டப்பட்டு, தினசரி பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட தங்கும் விடுதி கோயிலை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் தற்போது தற்காலிகமாக கோயில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. இதையடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய கந்தசுவாமி கோயில் அலுவலகம் மற்றும் ஆதீன குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அரசு தரப்பில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது சிதிலமடைந்து பாழடைந்த பழைய அலுவலகம் மற்றும் ஆதீன குடியிருப்பு கட்டிடம் நேற்று இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் சுமார் ரூ.2 கோடி செலவில் புதிய அலுவலகம் மற்றும் ஆதீன குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு

சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு