வேலூரில் சித்ரா பவுர்ணமி ேகாலாகலம்: நாளை இரவு 6 புஷ்ப பல்லக்குகள் பவனி; இன்னிசை கச்சேரிகள் ஏற்பாடு

வேலூர்: சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் நாளை இரவு 6 புஷ்ப பல்லக்குகள் பவனி நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் இரவு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் திரளான பக்தர்கள் விழாவை காண வேலூரில் கூடுவது வழக்கம். இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி புஷ்ப பல்லக்கு விழா நாளை கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில் புஷ்ப பல்லக்கு, வெல்லமண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி ரோடு விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, வாணியர் வீதி சுந்தர விநாயகர் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலி அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண சாமி கோயில் இருந்து பூப்பல்லக்கு உட்பட 6 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளது. இந்த பல்லக்குகள் வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் ஒவ்வொரு கோயிலில் இருந்து புஷ்ப பல்லக்குகள் புறப்பட்டு மண்டி வீதியை வந்தடையும். அங்கு பூப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் மேளதாளங்களுடன் 6 பூப்பல்லக்குகளும் புறப்பட்டு லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர் பெட்ரோடு, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், அண்ணா சாலை வழியாக அணி வகுத்தபடி கோட்டைக்கு வருகிறது. அங்கு கண்கொள்ளாக்காட்சியாக வாணவேடிக்கை நடத்தப்படுகிறது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம் நடைபெற இருப்பதால் இந்தாண்டு இக்கோயில் சார்பில் புஷ்ப பல்லக்கு இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புஷ்ப பல்லக்கு விழாவையொட்டி வேலூரில் முக்கிய இடங்களில் இன்னிசைக் கச்சேரிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Related posts

எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு!

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்