ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களின் பெயர் மாற்றம்: ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதாக மருத்துவர்கள் எதிர்ப்பு..!!

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களின் பெயரை ஒன்றிய அரசு மாற்றியதற்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த பெயரை அமல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த பெயரோடு ‘ஆரோக்யம் பர்மம் தனம்’ என்ற வாக்கியத்தையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பெயர் பலகையை வைப்பதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் இந்தியை திணிக்கும் வகையில் ஒன்றிய அரசு இதுபோன்ற பெயர்களை வைப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சுகாதார மையங்கள் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ஆயுஷ்மான் பாரத் என்பதே இந்தி திணிப்பு தான் என்றபோது அதன் கீழ் செயல்பட்டு வரும் பிற திட்டங்களின் பெயர்களையும் மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் உரிமையில் ஒன்றிய அரசு தலையிடுவதாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். மருத்துவ திட்டங்களுக்கு மாநில அரசு தான் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை

பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை