பூந்தமல்லியில் இந்து அமைப்பு மாநில தலைவர் படுகொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேரிடம் தீவிர விசாரணை


பூந்தமல்லி: பூந்தமல்லியில் இந்து அமைப்பு தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை அடுத்த மாங்காடு அம்பாள்நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாஜி (45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பூந்தமல்லி குமணன்சாவடியில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ராஜாஜியை மர்ம கும்பல் சரமாரி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் டீக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது ஏற்கனவே ராஜாஜி மீது கட்டப்பஞ்சாயத்து, பெண்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இருந்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் விசாரிக்க தொடங்கினர்.

கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மாங்காடு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ராஜாஜியின் தம்பி கண்ணன் என்பவருக்கும், காட்டுப்பாக்கம் ஸ்டாலின் நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் தரப்பினர் கண்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கண்ணனின் கால் உடைந்துள்ளது. இந்த நிலையில் ராஜாஜியும் அவரது தம்பி தரப்பினரும் கிருஷ்ணகுமாரை பழிக்குப்பழிவாங்க சந்தர்ப்பத்தை பார்த்து காத்திருந்துள்ளனர். இதற்கிடையே, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராக இருக்கும் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி செட்டித்தெருவை சேர்ந்த கோபால் (61) என்பவருக்கும், ராஜாஜிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

காங்கிரஸ் பிரமுகரான கோபாலின் 2வது மனைவி கவுரி கடந்த சில ஆண்டுகளாக அவரைவிட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜாஜி, கவுரியை தனது மனைவி எனக்கூறி சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கவுரி இறந்துபோன நிலையில் பூந்தமல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கவுரியை தனது மனைவி என்றும் அவரது பெயரில் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து இருப்பதாகவும் ராஜாஜி போஸ்டர்கள் ஒட்டியதுடன் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.
இது கோபால் தரப்பினருக்கு பெரும் அவமானத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கோபால் சம்பாதித்த சொத்துக்களில் பாதி கவுரியின் பெயரில் இருப்பதால் அந்த சொத்து சம்பந்தமான பிரச்னையும் கடந்த சில வாரங்களாக ராஜாஜிக்கும், கோபாலுக்கும் இடையே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ராஜாஜியை பழிவாங்க நினைத்த கோபால் தரப்பினர் கிருஷ்ணகுமாருக்கும், ராஜாஜிக்கும் மோதல் இருந்து வந்துள்ளதை அறிந்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்ட கோபால் தரப்பினர், ராஜாஜியும் அவரது தம்பி கண்ணனும் உன்னை போட்டு தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீ முந்திக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கிருஷ்ணகுமாரை தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணகுமார் தரப்பினர் ராஜாஜியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று குமணன்சாவடியில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ராஜாஜியை, கிருஷ்ணகுமார் தரப்பினர் வெட்டி படுகொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணகுமார் (34), குமணன்சாவடியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால் (61), மாங்காடு பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (45), லோகநாதன் (38), குமணன்சாவடியை சேர்ந்த சந்தோஷ் குமார் (32), ராஜேஷ் (32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் வெள்ளவேடு காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!