அவசரப்பட்டு தாமரையோடு ஐக்கியமானதை நினைத்து இப்போது அலுத்துக்கொள்ளும் கூட்டணிக் கட்சிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோன்னு தாமரையோட கூட்டணி போட்ட பார்ட்டிகள் எல்லாம் இப்ப யோசிக்கிறாங்களாமே?’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எலக்‌ஷன் செலவுக்காக தாமரை கட்சி ஒதுக்கிய நிதியை, டிஸ்டிரிக்ட் தலைவர்கள் அபேஸ் செய்து விட்டனர். இது தொடர்பாக விசாரித்து, அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று ெபரும்பாலான மாவட்டங்களில் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சிருக்காங்களாம். இதில் ஒரு சில மாவட்டங்களில், போஸ்டர்கள் ஒட்டியும் மானத்தை வாங்கினாங்களாம்.

இது ஒருபுறமிருக்க, சில மாவட்டங்களில் உள்ள தலைவர்கள், இலை கட்சியின் நிர்வாகிகளோடு மறைமுகமாக உறவாடி, ஒரு குறிப்பிட்ட அமவுண்டை வாங்கிய நிகழ்வுகளும் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக கசிய ஆரம்பிச்சிருக்காம். அதிலும் குறிப்பாக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை எல்லாம், அங்குள்ள தாமரை டிஸ்டிரிக்ட் தலைவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலையாம். இதை குக்கர், ேதனி, சைக்கிள் என்று அனைத்து நிர்வாகிகளும், அவங்க லீடர்களின் கவனத்திற்கு கொண்டு போயிருக்காங்களாம்.

தமிழ்நாட்டுல எப்படி பார்த்தாலும், தாமரையை விட அதிக செல்வாக்கு எங்க கட்சிகளுக்கு இருக்கு. நாங்க கடந்த கால தேர்தல்களில் தனியாகவும், பல கூட்டணிகளிலும் இருந்திருக்கோம். கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கோம். அப்படி இருந்தும், நடந்து முடிஞ்ச தேர்தலில் கொஞ்சம் அவசரப்பட்டு தாமரையோட சேர்ந்துட்டமோன்னு தோணுது. கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் என்று புலம்புறாங்களாம் கூட்டணி போட்ட பார்ட்டிகள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பை எலக்‌ஷனில் காசுக்கு விலை போயிடாதீங்கன்னு கோயம்பேடு கட்சி மாஜி எம்எல்ஏ அட்வைஸ் பண்றாராமே?’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளார்களாம்.கூட்டணியில் உள்ள கோயம்பேடு கட்சியும், இலை கட்சியும் ஊருக்கு ஊர் நிர்வாகிகளை நியமித்து ஓட்டுக்களை சேகரித்து வருகிறார்களாம்.

இந்நிலையில் கோயம்பேடு கட்சியின் மாஜி எம்எல்ஏ, ஒன்றிய அளவிலான கூட்டத்தை நடத்தி வருகிறாராம். காணை ஒன்றியத்தில் கூட்டம் போட்ட மாஜி எம்எல்ஏ, நம் கட்சியில் யாரும் விலை போகாதவர்கள். பொருளாதாரத்தில் நாம் பின் தங்கி இருந்தாலும், கேப்டனுக்கு விசுவாசமாக இருப்பவர்கள். 2011 சட்டமன்ற தேர்தலில் நம் தயவால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்ததை அக்கட்சியின் மாஜி அமைச்சர் சி.வி சண்முகமே கூறி வருகிறார்.

நமக்கு வர வேண்டியது வருதோ, இல்லையோ கட்சி தலைமை சொல்வதையும், மாவட்ட செயலாளர் சொல்வதையும் கேட்டு செயல்பட வேண்டும் என்று அட்வைஸ் பண்ணிட்டு சென்றாராம். மேல்மட்டத்தில் மட்டும் கவனிப்பு சிறப்பாக இருக்கும். அதோடு அவர்கள் சென்று விடுவார்கள். ஆனால், அடிமட்ட தொண்டர்களோ கடைசி நாற்காலி வரை உட்கார்ந்து தேய்த்து விட்டு செல்ல வேண்டும் என்று புலம்பியிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரில் கால்வாய் வெட்ட அனுமதி கேட்க வந்தவரிடம் லஞ்சம் வசூலித்ததாக நீர்வளத்துறையின் பி கிரேடு, சி கிரேடு என இரு அதிகாரிகள் சிக்கியிருக்காங்களாமே?’’ ‘‘அது உண்மைதான். அவங்க உயர்நிலை கிரேடு அதிகாரிகள் என்பதால் 30 நாட்கள் வரையிலும் ஜாமீன் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். வசூலில் வாரிக்கொட்டி வந்தவர்கள்தான் என சக ஊழியர்களே இவர்களை பேசி வரும் நிலையில், தூங்கா நகரத்து சித்திரை விழாவில் அழகர் வரவேற்பிற்கு துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த செலவுக்காகவே வசூல் செய்திருப்பதாக இவ்விரு அதிகாரிகளும் தெரிவித்திருக்கிறார்களாம்.

கூடுதலாக, கட்டுமானப்பிரிவின் இன்னொரு அதிகாரிக்கும் இதில் தொடர்பிருக்கிறதென தெரிவித்துள்ளனராம். தங்கள் தவறுக்கு கடவுளையே காரணமாக்கியதோடு, மேலும் ஒருவரையும் தொடர்புக்கு ஆளாக்கியுள்ள இருவரின் ஜாதகத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக சேகரித்து முடித்திருக்கிறதாம். திட்டங்கள் முறையாக மக்களுக்கு போய்ச்சேர்வதில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், வசூலால் அவப்பெயர் தந்து வரும் இந்த இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகள் இன்னும் சிலரது பட்டியலையும் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இது தூங்கா நகரத்து பொதுத்துறை அலுவலக வளாகத்தையே பீதியில் உறைய வைத்திருக்கிறதாம்’’ என்று விவரித்தார் விக்கியானந்தா. ‘‘ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காத தாமரை மாநில தலைவர் மீது கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சியினர் இருக்காங்களாமே?’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.‘‘டெல்டா மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை கட்சி கூட்டணி வேட்பாளர்களாக மலைக்கோட்டை ெதாகுதியில் குக்கர் கட்சி வேட்பாளரும், மாயூரம் தொகுதியில் மாம்பழம் கட்சி வேட்பாளரும் போட்டியிட்டனர்.

மற்ற தொகுதிகளான டெக்ஸ்டைல்ஸ், கடலோரம், நெற்களஞ்சியம், சின்ன வெங்காயம் தொகுதிகளில் தாமரை கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் மாயூரம் , மலைக்கோட்டை தொகுதி கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டதால் மாநில தலைவர் மீது தாமரை கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்களாம்.

இதனால் இந்த 2 மாவட்ட தாமரை கட்சி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் யாருமே இறுதி கட்ட பிரசாரத்தில் கூட கூட்டணி கட்சிக்காக தேர்தல் வேலை பார்க்காமல் எதிராக மறைமுகமாக வேலை பார்த்து வந்ததாக குக்கர், மாம்பழம் கட்சி தலைமையிடத்தில் இருந்து தாமரை மாநில தலைவருக்கு நேரடியாகவே புகார் சென்றதாம்.

இதனால் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மாற்றம் இருக்க கூடும் என தாமரை கட்சிக்குள்ளே ஒரு தரப்பு மகிழ்ச்சியில் இருந்து வந்தனர். தேர்தல் முடிந்து அடுத்த மாதம் வாக்கு எண்ணிக்கை கூட நடைபெற உள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தாமரை மாநில தலைவர் மீது குக்கர், மாம்பழ கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம். மலைக்கோட்டை, மாயூரம் மாவட்டங்களில் இந்த டாப்பிக் தான் ஓடுகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு