குற்றச்சாட்டு கூறும் அதிமுகவினர் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு சபாநாயகர்-எடப்பாடி பழனிசாமி இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம்

எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதிலளிக்கும்போது எதிர்க்கட்சிகள் அவையில் இருப்பதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். இதனால் அவையில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. சபாநாயகர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக்கோரிக்கை நடந்தது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அனைத்து வகையிலும் பதிலளிக்க தயாராக வந்துள்ளோம். ஆனால், அமைச்சர்கள் பதிலளிப்பதை கேட்க எதிர்க்கட்சிகள் அவையில் இருப்பதில்லை.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சி குறித்து வேண்டுமென்றே அமைச்சர் அவதூறாக பேசுகிறார். அமைச்சர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதைபோல எதிர்க்கட்சியினர் பேசுவதை நேரலையில் வழங்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கேட்கிறோம். அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்.
சபாநாயகர் அப்பாவு: அதிமுக ஆட்சியிலும் எதிர்க்கட்சி தலைவர் பேசிய ஒளிப்பதிவை கொடுத்ததில்லை. தற்போது கேள்வி நேரம் மட்டுமே நேரலை செய்யப்படுகிறது. மேலும் 110 விதி, முக்கிய தீர்மானங்களும் நேரலை செய்கிறோம். இதில் எந்த பாராபட்சமும் இல்லை. நேரமில்லா நேரத்தில் பேசுவதை நேரலை செய்வது சாத்தியமில்லை.
எடப்பாடி பழனிசாமி: மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேசுவதை கூட நேரலை செய்வதில்லை. ஆனால் அமைச்சர் பதில்கள் மட்டுமே வருகிறது. எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள் என மக்களுக்கு தெரிய வேண்டாமா? அதை காட்டினால் தானே மக்களுக்கு புரியும்.
சபாநாயகர் அப்பாவு: மானிய கோரிக்கை விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை செய்யவில்லை.
எடப்பாடி பழனிசாமி: கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதை தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். அதை நேரலையில் தருவதில் என்ன பிரச்னை?
சபாநாயகர்: நேரலை செய்வதில் பிரச்னை உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம்.
எதிர்க்கட்சி கொறடா வேலுமணி: கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளும் அவையை புறக்கணித்துள்ளது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை மட்டுமாவது நேரலை செய்ய முன்வர வேண்டும்.
சபாநாயகர்: நான் எந்த உத்தரவாதமும் தரவில்லை. இந்த விவகாரத்தை பேசி தீர்வு காணலாம்.

  • வழக்கம்போல் அதிமுக புறக்கணிப்பு
    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கரை தொடர்ந்து 8 உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இறுதியாக அரூர் சம்பத்குமார் (அதிமுக) பேசினார். இதைத்தொடர்ந்து விவாதத்துக்கு பதில் அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு அளித்தார். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அமைச்சரின் பதிலுரையை கேட்காமல், புறக்கணித்து பேரவையில் இருந்து வெளியே சென்றனர். அப்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் நாகைமாலி பேசும்போது, ‘அதிமுக உறுப்பினர்கள் ஏன் போகிறார்கள், ஏன் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. காரணத்தை சொல்லிவிட்டு போக வேண்டும்’ என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பொறுமையும் இருக்காது, பெருந்தன்மையும் இருக்காது. வெளிநடப்பு, வெளியேற்றம், புறக்கணிப்பு என்பது பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். ஆனால், தொடர்ந்து 10 நாட்களாக அமைச்சர்களின் பதிலுரையை எதிர்க்கட்சி புறக்கணிப்பது அநாகரீகம். இதில் இருந்து அவர்கள் மாறுபட வேண்டும்’’ என்றார்.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்