மாநகர பேருந்து நிறுத்தத்தில் அத்துமீறி நிழற்குடையை இடித்த அதிமுக பிரமுகர் கைது: பாஜ பிரமுகருக்கு வலை

திருவொற்றியூர்: மணலியில் பேருந்து நிறுத்தத்தில் அத்துமீறி நிழற்குடையை இடித்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாஜ பிரமுகரை தேடி வருகின்றனர். மணலி மண்டலம், 19வது வார்டுக்கு உட்பட்ட சின்ன மாத்தூர் சாலையில் மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் (62) என்பவர், பொக்லைன் இயந்திரம் மூலம், இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை இடித்து தரைமட்டமாக்கினார்.

தகவலறிந்த மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், கவுன்சிலர் காசிநாதன், நிர்வாகிகள் தாமரை செல்வன், மஞ்சம்பாக்கம் பாபு, கார்த்திக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், நிழற்குடையை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சின்ன மாத்தூர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால்பண்ணை காவல் ஆய்வாளர் வேலுமணி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மற்றும் பொக்லைன் டிரைவர் சுபாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், நிழற்குடையை இடிக்க தூண்டிய வழக்கில் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் பிரகாஷ் ரெட்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* சாலை மறியல்
இடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடைக்கு பதிலாக மீண்டும் அதே இடத்தில் புதிய நிழற்குடையை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று காலை சின்ன மாத்தூர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related posts

மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு

140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்