லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: லத்தூர் ஒன்றியத்தில் முகையூர், மடையம்பாக்கம், அம்மனூர் ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எம்எல்ஏ பனையூர் பாபு தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் முகையூர், மடையம்பாக்கம், அம்மனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த பருவமழையின்போது, அப்பகுதியில் கனமழை பெய்து ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்தனர்.

அதன் அறுவடை சீசன் தற்போது அப்பகுதிகளில் கலை கட்டியுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, தமிழ்நாடு அரசு திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி மடையம்பாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன் அனைவரையும் வரவேற்றார்.

செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முகையூர், அம்மனூர் உள்ளிட்ட கிராமங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில், பேரூர் செயலாளர் மோகன்தாஸ், அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி ஜனார்த்தனன், மடையம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் பர்வதம் வரதன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.