திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: கலெக்டரிடம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்து ஆகும். தற்போது திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது 22 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கனவாக கூடுதல் தொலைதூரை எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தொடர்ந்து தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த மார்ச் 3ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பக்கத்தில் வெளிவந்த செய்தி நகலை மனுவுடன் இணைத்து, திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சங்க நிர்வாகிகள் சுந்தரராஜன், பாஸ்கர், ஜெயபால்ராஜ், அசோக் குமார், ரகுபதி ஆகியோர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் கூடுதலாக 9 எக்ஸ்பிரஸ் வண்டிகள் நின்று செல்ல வேண்டும். சிறிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் இரயில் நிலையத்தில் நிற்பதில்லை என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். திருவள்ளூர் இரயில் நிலையத்தில் கூடுதல் விரைவு வண்டிகள் நின்று செல்ல வேண்டும் என பல தரப்பு மக்களும் கேட்டுள்ளனர். எனவே ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட இந்த கடிதம் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார்.

Related posts

நெல்லையில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு