ஏஐ தொழில்நுட்பத்தால் அமெரிக்காவில் 4,000 பேர் வேலை காலி: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. உலகில் நாள்தோறும் தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் சார்ந்த புதிய சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் மனிதர்களை போன்றே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாட்ஜிபிடி எனப்படும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு பல்வேறு துறைகளிலும் நுழைவதால் ஏராளமானோர் வேலையை இழக்க நேரிடும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அந்நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு புகுத்தப்பட்டதே காரணம் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சேலஞ்சர், கிரே மற்றும் கிறிஸ்துமஸ் வௌியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “மே மாதத்தில் 3,900 பேர் ஆள்குறைப்பு செய்யப்பட்டதற்கு ஏஐ தொழில்நுட்பம் காரணம். இது மே மாத பணிநீக்கங்களில் 4.9 சதவீதம். சிஎன்இடி என்ற ஊடக நிறுவனம் செய்திகளை எழுதி, வௌியிட சாட் ஜிபிடியை பயன்படுத்துவதால் செய்தியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதேபோல் பல்வேறு நிறுவனங்களிலும் ஜனவரி முதல் மே மாதம் வரையில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 500 பேர் வேலை இழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவிய 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் தொடக்கம் பணியாளர்களுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்

கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்