வெல்லம், நாட்டுச்சர்க்கரை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

பரமத்திவேலூர், மே 26: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரை தயாரிப்பு ஆலைகளில் 2நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 21வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கை செய்தனர். இதில் வெல்ல ஆலைகளில் வெல்லப்பாகு தயாரிக்கும் இடம், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமாக உள்ளனரா, அஸ்கா சக்கரை இருப்பு, வேதிப்பொருள்கள் இருப்பு ஆகியவற்றை தணிக்கை செய்தனர்.

இந்த ஆய்வின் போது, அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு கலப்படம் செய்து நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், 38 ஆயிரத்து 310 கிலோ வெல்லம், நாட்டுச்சக்கரை மற்றும் 3,725 கிலோ அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கையின் போது, 13 வெல்ல ஆலைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்விற்கு‌ அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட வெல்ல ஆலைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

Related posts

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

493 மதிப்பெண் பெற்று அன்பில் அரசு மாணவி அசத்தல்

விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு