சாலியமங்கலம் ரயில்வே நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

தஞ்சாவூர், மே25:தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள கிழக்கு திருபுவனம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மனைவி தமிழரசி (40). இவர் சாலியமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். சாலியமங்கலத்தில் உள்ள ரயில் நிலையம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ரயில்வே நடைமேடை பகுதியில் தமிழரசி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே நடந்து சென்றார். திடீரென அவர் தமிழரசியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதைக்கண்டு திடுக்கிட்ட தமிழரசி திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் ஓடிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், எஸ்ஐ பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசையரசன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள கோவில்பத்து தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜா என்ற காமராஜ் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட காமராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்