கலெக்டர் வழங்கினார் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி கரூர் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்தினர் தர்ணா

கரூர், ஜூன்6: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமின் போது, குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்ககோரி ஒரு குடும்பத்தினர் கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடிரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா கருங்கல்பட்டி குடித்தெருவை சேர்ந்த சாந்தி என்பவர், தான் குடும்பத்துடன் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களிடம் மனு அளித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வேறு வழியின்றி கருர் கலெக்டர் அலுவலகம் வந்த சாந்தியின் குடும்பத்தினர் திடீரென நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சாந்தி குடும்பத்தினரிடம் பேசி, இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றனர்.

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு