கரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: 35 பயனாளிகளுக்கு ரூ.14.37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

கரூர், ஜூன் 6: கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 35 பயனாளிகளுக்கு ரூ. 14,37,800 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கரூரில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது இதில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 54 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மா ற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 14 நபர்களுக்கு தலா ரூ. 12.500 மதிப்பில் ரூ. 1,75,000 மதிப்பிலான திறன்பேசிகளையும், 10 நபர்களுக்கு தலா ரூ. 27,800 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், 2 நபர்களுக்கு ரூ. 1635 மதிப்பில் ரூ. 3670 மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரமும், 10 நபர்களுக்கு தலா ரூ. 83,500 மதிப்பில் ரூ, 8,35,000 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரும், மண்மங்கலம் வட்டம், பள்ளபாளையத்தை சேர்ந்த விமல் என்பவர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்ததை ஒட்டி அவரின் தந்தை கண்ணன் என்பவரிடம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 4 லட்சத்திற்கான ஆணைகளையும் என மொத்தம் 35 நபர்களுக்கு ரூ.14,37.800 மதிப்பில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.

சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு உலக அமைதியில் குழந்தைகளின் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கேன்வாஸ் ஒவியப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டியில் பங்கு பெற்ற 18 குழந்தைகளுககு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் அறிமுகம்

28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்