பைரெட்டி பல்லி மண்டலம் கொள்ளபல்லி கிராமத்தில் ஒருவழி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-சித்தூர் மனுநீதிநாள் முகாமில் இணை கலெக்டரிடம் கோரிக்கை

சித்தூர் : பைரெட்டி பல்லி மண்டலம் கொள்ளபல்லி கிராமத்தில் ஒருவழிச்சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுநீதிநாள் முகாமில் இணைகலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் நேற்று இணை கலெக்டர் சீனிவாஸ் தலைமையில் நடந்தது.
சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவது வழக்கும் அவ்வாறு பெற்றுக்கொள்ளும் மனுக்களை பரிசீலனை செய்து மனுதாரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

அதேபோல் நேற்று சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, சுடுகாடுக்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட இணை கலெக்டர் சீனிவாச ராவ் அவர்களிடம் வழங்கினார்கள் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட இணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். இதில் மொத்தம் 159 பேர் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி வழங்கியுள்ளனர்.

அதன்படி, சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம் சிந்தமாகுலபல்லி தலித் வாடா கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமம் அருகே சுடுகாடு நிலம் உள்ளது. எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அந்த சுடுகாட்டு நிலத்தில் அடக்கம் செய்து வந்தோம். ஆனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த உயர் வகுப்பினர் சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள்.

இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் தட்டிக் கேட்டோம். அதற்கு அவர்கள் எங்களுக்கு சொந்தமான நிலம் அதற்கான பட்டா பாஸ்புத்தகம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் உள்ளன என காண்பித்தார்கள். பல நூறு ஆண்டுகளாக அந்த நிலத்தை நாங்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு செய்ததால் எங்களுக்கு சுடுகாடு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை எங்கு அடக்கம் செய்வது என புரியாத புதிராக உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் எங்களுக்கு சுடுகாட்டு நிலத்தை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் எங்கள் கிராமம் அருகே வேறொரு இடத்தை சுடுகாடாக அறிவித்து எங்கள் கிராமத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

மனுவை பரிசீலனை செய்த இணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்கு இடம் வழங்குவதாக உறுதி அளித்தார். அதேபோல், சித்தூர் மாவட்டம் பைரெட்டி பல்லி மண்டலம் கொள்ளபல்லி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமத்திலிருந்து ஒருவழி பாதையில் 500 மீட்டர் சென்றால் சித்தூர் நகரத்திற்கு வரும் முக்கிய சாலையை அடைய முடியும்.

ஆனால் வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு முக்கிய சாலைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் முதியோர், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் 3 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வழி சாலையை அகலப்படுத்தி சிமென்ட் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட இணை கலெக்டர் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக அந்த கிராமத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related posts

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்