ஓடும் பஸ்சில் நடிகையிடம் ஆபாச செய்கை ஜாமீனில் வந்த வாலிபருக்கு மாலை அணிவித்து வரவேற்பு: ஆண்கள் சங்கத்தின் நடவடிக்கைக்கு கண்டனம்

திருவனந்தபுரம்: கொச்சியில் ஓடும் பஸ்சில் மலையாள நடிகையிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானபோது கேரள ஆண்கள் சங்கம் சார்பில் சிறை வாசலில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நந்திதா. இவர் ஒரு சில மலையாள படங்களிலும், டிவி தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இவர் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு கேரள அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் அருகே இருந்த ஒரு வாலிபர் திடீரென ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டார். அந்த நபரை கண்டித்த அவர், இது குறித்து பஸ் கண்டக்டரிடம் புகார் செய்தார். அந்த வாலிபரின் நடவடிக்கைகளை நந்திதா தன்னுடைய செல்போனில் வீடியோவும் எடுத்தார். இந்நிலையில் தப்பமுயன்ற அந்த வாலிபரை கண்டக்டர் விரட்டிச் சென்று பிடித்து நெடும்பாசேரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கோழிக்கோட்டை சேர்ந்த முகமது சவாத் (27) என தெரியவந்தது. விசாரணைக்குப் பின் போலீசார் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கேரள ஆண்கள் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. இது குறித்து ஆண்கள் சங்கத்தின் மாநில தலைவர் அஜித்குமார் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகை நந்திதா பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார் என்றார். இதற்கிடையே ஆலுவா சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சவாதுக்கு சிறை வாசலில் மாலை போட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை நந்திதா கூறியதாவது: பஸ்சில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபருக்கு சிறை வாசலில் வரவேற்பு கொடுத்தது வெட்கக்கேடான ஒரு செயலாகும். தவறு செய்யாத என்னை இந்த சம்பவத்திற்குப் பின் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் திட்டி வருகின்றனர். ஆனால் ஆபாசமாக நடந்து கொண்ட அந்த நபருக்கு பூ மாலை வரவேற்பு கிடைக்கிறது. இந்த சம்பவத்தில் எனக்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை வனத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம்

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!