மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தமைக்காக தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை செய்பவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக விருதுகள் வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதேபோல் மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் மாற்றத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விருதுகள் பெற விண்ணப்பப் படிவங்களை, உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தேவையான சான்றுகளுடன் இரண்டு நகல்களை வருகின்ற 28ம் தேதி மாலை 5 மணிக்குள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், மேலும், விண்ணப்பப் படிவங்களை http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போலி நகைகள் பறிமுதல்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!