மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.3,000 கோடியை மக்களிடம் திரும்ப அளிப்பேன்: தேர்தல் விதியை மீறியதாக மோடி மீது திரிணாமுல் புகார்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.3,000 கோடியை மக்களிடம் திரும்ப அளிப்பேன் என்று தேர்தல் விதியை மீறி வாக்குறுதி அளித்ததாக பிரதமர் மோடி மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பாஜக சார்பில் அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் அம்ரிதா ராயுடன் தேர்தல் பணிகள் குறித்து உரையாடினார்.

அந்த ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் மோடி பேசுகையில், ‘மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாயை, ஏழை மக்களுக்கு அளிப்பதற்காக சட்ட ஆலோசனைகளை ஆராய்ந்து வருகிறேன். அது ஏழைகளின் பணம். அது அவர்களுக்கே சென்றடைய வேண்டும். அதற்கான வழிகளை கண்டுபிடிப்பேன். மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்’ என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் பிரிவு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் தொகை யை, பிரதமர் மோடி வாக்குறுதியின்படி ஒன்றிய அரசால் மக்களுக்கு அளிக்க முடியாது. அதற்கான சட்ட விதிமுறைகள் உள்ளன. எவ்வாறாயினும் அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட, இணைக்கப்பட்ட, கைப்பற்றப்பட்டதாக ரூ.3000 கோடி என்பது உறுதிப்படுத்தப்படாத தொகையாகும். அந்த தொகையை மக்களுக்கு அளிப்பேன் என்று மோடி வாக்குறுதி அளிப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். மேலும் வாக்காளர்களை திசை திருப்பும் வகையில், அவர்களுக்கு பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற வாக்குறுதியாகும். எனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் பணம் தருதல் தொடர்பான வாக்குறுதிகளை அளிப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதுபோன்ற வாக்குறுதிகளை பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் அளித்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்ற வாக்குறுதிகளை அளிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்களின் உரையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

பச்சிளம் குழந்தை கொன்று வீச்சு

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

யூடியூபர் சங்கர் மேலும் 3 வழக்குகளில் கைது