ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தன்னிடம் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்க மாநில ஆளுநராக இருப்பவராக சி.வி.ஆனந்த போஸ். 1977ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2022 நவம்பர் 23ம் தேதி முதல் மேற்கு வங்க ஆளுநராக இருந்து வருகிறார்.

பல்வேறு விஷயங்களில் இவர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். தேர்தலுக்கு பிறகான வன்முறை விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி திரிணாமல் காங்கிரஸ் அரசை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் ஆளுநர் மாளிகையில் உள்ள போலீஸ் அவுட் போஸ்ட்டில் ஆளுநர் ஆனந்த போசுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

ஆளுநர் தன்னிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக குற்றம்சாட்டினார். உடனடியாக போலீசார், ஹரே தெரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அப்பெண்ணை அங்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு எழுதிக் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்கு 2 நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு வந்து இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக கொல்கத்தா வரும் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் இரவு தங்குவார் என முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன. பிரதமர் வரும் சமயத்தில் ஆளுநருக்கு எதிராக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்