உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்தவருக்கு அபராதம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்தவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். உத்தரபிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம் அம்பேத்கர் நகரில் காஜுரி பஜாரை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் பழைய கார்களை விலைக்கு வாங்கி அதை மாடலாக மாற்றி விற்பனை செய்து வருகிறார். அண்மையில் ஒரு காரை வாங்கி, ஹெலிகாப்டர் போல மாற்றினார். காரின் மேல்பகுதியில் சுழலும் மின்விசிறி, பின்பகுதியில் ஹெலிகாப்டரில் உள்ள இறக்கைகள் போன்று வடிவமைத்தார். பின்னர் அந்த காரை பெயிண்ட் செய்வதற்காக பஜார் பகுதியிலுள்ள சாலை வழியாக எடுத்து சென்றார். இதை போலீசார் பார்த்து விட்டனர். உடனே அந்த காரை நிறுத்தி பறிமுதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மோட்டார் வாகன சட்டத்தின்படி உரிய அனுமதி பெறாமல் எந்த ஒரு வாகனத்தையும் மாற்ற கூடாது என்பதாகும். அதனால், அந்த காருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, ஹெலிகாப்டர் போன்ற பாகங்களையும் காரில் இருந்து நீக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து ஈஸ்வர் தீன் கூறும்போது, “ரூ.2.5 லட்சம் செலவு செய்து காரை ஹெலிகாப்டர் போல மாற்றினேன். இந்த காரை திருமண ஊர்வலங்களுக்கு பயன்படுத்தினால் அதிக பணம் கிடைக்கும் என்று நம்பினேன். தற்போது முதலுக்கே மோசமாகிவிட்டது. இதேபோன்று ஹெலிகாப்டர் போல மாற்றி அமைக்கப்பட்ட கார்கள், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்படுகிறது. அதன்படிதான் எனது காரையும் மாற்றினேன்’ என்றார். தற்போது அந்த கார் அம்பேத்கர் நகர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் தற்போது இந்த கார் வைரலாகி வருகிறது.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்