திருவில்லிபுத்தூர் அருகே புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் தயார்: வெயில் காலத்தை சமாளிக்க வனத்துறை ஏற்பாடு

* விலங்குகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்படும்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், தேவதானம், திருவில்லிபுத்தூர் மம்சாபுரம், குன்னூர், வத்திராயிருப்பு புதுப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல், சாப்டூர் ஆகிய வனப்பகுதிகள் மற்றும் மேகமலையை சுற்றியுள்ள வனபகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு ஏராளமான புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், மான்கள், மிளா மான்கள், காட்டெருமைகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றுக்கு மழை நேரங்களில் தேவையான குடிநீர், உணவு மிக தாராளமாக கிடைக்கும். ஆனால் வெயில் காலங்களில் கடுமையான வறட்சி, மழை இல்லை என்றால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வரும். இவ்வாறு வரும்போது மான்கள் உள்ளிட்ட விலங்குகள் நாய்கள் கடித்து இறப்பதும், வாகனங்கள் மோதி உயிரிழப்பதும் நடக்கும். இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க கோடையில் வனவிலங்குகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான குடிநீர் தொட்டிகள் அமைத்துள்ளனர்.

இவற்றில் கோடை காலங்களில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவர். திருவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள காப்பக பகுதியில் திருவில்லிபுத்தூர் ரேஞ்ச், வத்திராயிருப்பு ரேஞ்ச், ராஜபாளையம் ரேஞ்ச், சிவகாசி ரேஞ்ச், சாப்டூர் ரேஞ்ச் ஆகிய ஐந்து ரேஞ்ச்கள் உள்ளன. இங்கு வனவிலங்குகள் பயன்பாட்டிற்காக சுமார் 40க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கொளுத்தும் வெயில் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனவிலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வனவிலங்குகள் கிராமங்களுக்குள், தோட்டங்களுக்குள் நுழைவது தடுக்கப்படும். இது குறித்து வனத்துறையை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘‘கோடை நேரத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகிறோம். ஆனால் கடந்த சில தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து ஓடைகளிலும் அருவிகளிலும் நீர்வரத்து உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது’’ என தெரிவித்தார்.

* தண்ணீர் தேடி வந்த மான் சாவு

திருச்சுழியை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றி திரிகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் கண்மாய்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றது. திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று மாலையில் தண்ணீரை தேடி வந்த நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் மான் ரயில்வே பாலத்தை கடக்க முற்பட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தது. இதனை கண்ட கிராமத்தினர் திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயம்பட்ட மானை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்