விருத்தாசலம் பகுதியில் புடலங்காய் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள சின்ன கண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், கோபுராபுரம், காணாது கண்டான், நறுமணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போதைய பருவத்தில் புடலங்காய் சாகுபடி செய்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு விதை போடப்பட்டு கொடியானவுடன், அதற்கான பந்தல் அமைத்து, நீர் பாய்ச்சி வருகின்றனர்.

தற்போது புடலங்காய் நல்ல அளவில் காய்க்கும் பருவம் என்றாலும் வழக்கமாக ஆடி மாதத்தில் பொழிய வேண்டிய பருவ மழை பொழியாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. புடலங்காய் பூ பூத்து, காய்க்க வேண்டிய சமயத்தில் மழை இல்லாததால் பூக்கள் கருகி விடுவதாகவும், காய்களும் பெறுக்காமல் பிஞ்சிலேயே வெம்பி விடுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கிடைக்கின்ற தண்ணீரை வைத்து புடலங்காய் கொடிகளை காப்பாற்றலாம் என்றாலும் கடுமையான வெயில், வறட்சி காரணமாக கிடைக்கின்ற தண்ணீரும் சரிவர பாய்வதில்லை என்றும் வேதனைப்படுகின்றனர். ஆள் கூலி, உரம், மருந்து என ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் வறட்சியால் காய்ப்பு இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்த்து இருக்கின்ற புடலங்காய்களை கிலோ பத்து ரூபாய்க்கு வியாபாரிகள் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் செய்த செலவுகளை எப்படி ஈடுகட்டுவது என விவசாயிகள் கவலை அடைகின்றனர்.

Related posts

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்