விசாகப்பட்டினத்தில் பரபரப்பு; கார் டிரைவரின் கிட்னி பறிப்பு;டாக்டர்கள், 2 பேருக்கு வலை: ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு ‘சீல்’ பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து துணிகரம்

திருமலை: பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கார் டிரைவரின் கிட்னியை பறித்த 2 பேர் மற்றும் டாக்டர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவில் உள்ள பாம்போ காலனியை சேர்ந்தவர் வினய் (34). கார் டிரைவர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வினய், ஒரு பாரில் மது அருந்தியபோது அதேபகுதியை சேர்ந்த சீனு, காமராஜ் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு 3 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடித்துள்ளனர். அப்போது வினயிடம், சிறுநீரகம் (கிட்னி) தானம் செய்வோர் இருந்தால், ரூ.8.5 லட்சம் வரை பெற்று தருவோம் என அவர்கள் கூறியுள்ளனர். பணத்திற்காக ஆசைப்பட்ட வினய், தனது கிட்னியை தானம் செய்ய முன்வந்துள்ளார். அதன்பேரில் வினய்யை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பல்வேறு பரிசோதனைகள் செய்துள்ளனர்.

இதையறிந்த வினய்யின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்து மகனை ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு பிறகும் சீனுவும், காமராஜும், வினய்யை தொடர்பு கொண்டு கிட்னி தானம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த இருவரும், ‘நீ கிட்னி தராவிட்டால் உனது பெற்றோரை கொன்று விடுவோம்’ என மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த வினய், கிட்னி தருவதாக கூறினார். கடந்த டிசம்பர் மாதம் பெந்திருத்தி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னியை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

ஆனால் விரைவில் வினய்க்கு மயக்கம் தெளியவில்லையாம். அதிர்ச்சியடைந்த சீனுவும், காமராஜும், ரூ.2.5 லட்சத்தை வினய்யின் பெற்றோருக்கு அனுப்பி விட்டு தலைமறைவாகினர். மயக்கம் தெளிந்த நிலையில் ரூ.8.5 லட்சத்திற்கு பதில் ரூ.2.5 லட்சம் மட்டுமே அவர்கள் கொடுத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும் வீடு திரும்பிய வினய்க்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கையும், காலும் செயலிழந்தது. கிட்னி அகற்றப்பட்ட நிலையில் சரியான சிகிச்சை எடுக்காததால் அவருக்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வினய் வீட்டிலேயே முடங்கினார்.

இதுகுறித்து பெந்திருத்தி போலீசில் நேற்று முன்தினம் வினய் புகார் அளித்தார். அதன்பேரில் விசாகப்பட்டினம் கலெக்டர் மல்லிகார்ஜுனா மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்தனர். தலைமறைவான காமராஜ் மற்றும் சீனு ஆகியோர் வினய்யை போன்று மேலும் 10 பேரை ஏமாற்றி மிரட்டி கிட்னி எடுத்தது தெரியவந்தது. இதற்கு தனியார் மருத்துவமனையும் அதன் டாக்டர்களும் உடந்தை என்பதும் ெதரியவந்தது. கிட்னி ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பெந்திருத்தி போலீசார் வழக்குப்பதிந்து காமராஜ், சீனு மற்றும் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

இயந்திரக் கோளாறு – 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்