விழுப்புரம் பூந்தோட்டத்தில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் ₹20,000 கொள்ளை: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டத்தில் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து, உண்டியல் பணம் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். இந்நிலையில் இக்கோயிலின் பூசாரி மேட்டுத் தெருவை சேர்ந்த ரவி (51) நேற்று பூஜைகள் முடித்துவிட்டு இரவு 8.30 மணியளவில் எப்போதும்போல கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவு கோயிலின் மதில்மேல் ஏறிகுதித்த மர்ம நபர்கள் உட்பிரகார கதவின் பூட்டை உடைத்து, உள்ளே உள்ள கிரீல் கேட்டினையும் உடைத்து அங்கிருந்த உண்டியலை சேதப்படுத்தி சுமார் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கோயில் சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி பொட்டு, அம்மன் பட்டு புடவையினுள் இருந்ததால் அவை தப்பியது.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி