ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்த வீடியோ வைரல்: ஜகதீப் தன்கர் கேலி செய்யப்பட்டதாக பாஜவின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி


புதுடெல்லி: நாடாளுமன்ற அவைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில், தற்போதைய குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் எம்பியான கல்யாண் பானர்ஜி, ஜகதீப் தன்கர் போல நடித்தும், மிமிக்ரி செய்தும் நகைச்சுவைக்கு முயன்றார். அதனை செல்போனில் வீடியோ எடுத்ததில் ராகுல் காந்தியும் சர்ச்சைக்கு ஆளானார். அவைத்தலைவர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் மீதான மாண்பு மட்டுமன்றி, அரசியலமைப்பு நிறுவனங்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பாடு இருந்ததாக பாஜ குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் பிரதமர் மோடி வரை பலரும் தங்களது அதிருப்தியை பதிவு செய்தனர். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மோடிக்கு எதிரான தாக்குதல்களில் இறங்கியிருக்கிறது. மக்களவையில் மோடி செய்த மிமிக்ரி குறித்தான வீடியோக்கள் இந்த வகையில் வைரலாயின. தொடர்ந்து காங்கிரஸ் எம்பியான ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரியை, பிரதமர் மோடி அவமதித்ததாக ஒரு பிளாஷ்பேக் சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.

”இந்தியாவின் குறிப்பிடத்தக்க ராஜதந்திரிகளில் ஒருவரான ஹமீது அன்சாரி, குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றி 2017, ஆகஸ்ட் 10 அன்று ஓய்வு பெற்றார். அவரை கேலி செய்யும் வகையில் பிரதமர் மோடி பேசியிருந்தார். மேலும் ஹமீது அன்சாரியின் மத அடையாளத்தை குறிப்பிட்டு அன்சாரியின் அரசியல் சாதனைகள் அனைத்துமே அவரது மத அடையாளத்தால் மட்டுமே கிடைத்ததாக பேசி அனைவருக்கும் அதிர்ச்சி தந்தார். அன்றைய தினம் நாடாளுமன்ற அரங்கில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்விலும் அதே போன்ற அவமதிப்பு பேச்சை தொடர்ந்தார்.

இப்படியான பிரதமர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது அவமரியாதை குறித்து பேசுவது சந்தர்ப்பவாதம் மட்டுமே. மக்களவையில் நடந்த அத்துமீறல் சம்பவம் மற்றும் எதிர்க்கட்சி எம்பி-க்கள் இடைநீக்கம் ஆகியவற்றிலிருந்து திசை திருப்பவே இவ்வாறு நடந்து கொள்கின்றனர்” என்று தனது எக்ஸ் தளத்தின் பதிவில் ஜெய்ராம் ரமேஷ் தாக்கியுள்ளார். இப்படியாக பாஜ கையில் எடுத்துள்ள விவகாரத்தை தற்போது காங்கிரஸ் கட்சியும், இதற்கு முன்பு ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்த வீடியோவை வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

Related posts

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஓவேலியில் 125 ஆண்டுகளை கடந்தும் போக்குவரத்துக்கு பயன்படும் இரும்பு பாலம்