வெட்டிவேர் சாகுபடி!

நெல், கரும்பு என வழக்கமான பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள், விவசாயத்தில் பெரிய அளவுக்கு லாபம் இல்லை. இதனால் வயலை வெறுமனே போட்டு வைத்திருக்கிறேன் என விரக்தியாக பேசுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். அதேநேரம் சில விவசாயிகள், வித்தியாசமாக ஏதாவது செய்து விவசாயத்தில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். அதுவும் சொந்த நிலம் இல்லாமல் குத்தகை நிலத்தை வாங்கி சாதித்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரெஞ்சு தேசமான புதுச்சேரி நகரப்பகுதியைச் சேர்ந்த கமலநாதன், கடலூர் செல்லும் வழியில் உள்ள கிருமாம்பாக்கம் பகுதியில் குத்தகை நிலத்தில் வெட்டிவேரை சாகுபடி செய்து லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். அவரைச் சந்தித்தபோது வெட்டிவேர் சாகுபடி குறித்து விளக்கமாக பேசினார்.

“புதுச்சேரி லாஸ்பேட்டைதான் எனக்கு சொந்த ஊரு. பி.ஏ வரை படித்த நான் சென்னையில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்தேன். சென்னையில் இருக்கும்போதே வாசனை செடிகளைப் பற்றி தெரியவந்ததால், அதனை உற்பத்தி செய்து சந்தைப் படுத்த வேண்டும் என நினைப்பேன். அதற்காக சென்னை அடுத்துள்ள திருவள்ளூர் மஞ்சக்குப்பத்தில் 20 ஏக்கர் நிலத்தை லீசுக்கு எடுத்து லெமன் கிராஸ் சாகுபடியில் ஈடுபட்டேன். இதில் கிடைத்த அனுபவமே எனக்கு வெட்டிவேர் சாகுபடி செய்வதற்கு நம்பிக்கையைக் கொடுத்தது. திருமணத்திற்குப் பின்பு புதுச்சேரியில் குடும்பத்தோடு செட்டிலாகி விட்டேன். அங்கு சுமார் 40 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வெட்டிவேர் சாகுபடியில் ஈடுபட்டேன். எந்தவொரு வாசனைப் பொருளும் வெட்டிவேரின் வாசத்திற்கு நிகர் ஆகாது. பார்ப்பதற்கு பகட்டாகத் தெரியாத இந்த வேர் அதீத மணம் கொண்டது. அதுமட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு பலன்களைக் கொடுக்கிறது. கொரோனா காலகட்டத்தில் எங்களிடம் இருந்த அனைத்து வெட்டி வேர்களையும் நிலவேம்பு கசாயம் செய்வதற்காக சென்னை ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு பெற்றுக் கொண்டார்கள்.

வெட்டிவேர் ஒரு புல் இனத்தைச் சேர்ந்த தாவரம்தான். இதன் வேரை வெட்டி எடுத்த பின்பு புல்லையும், வேரையும் வெட்டி, நடுவில் உள்ள தண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம். ஒருமுறை நாற்றிற்கு செலவு செய்தால் போதும். மீண்டும் நாற்று வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. எத்தகைய மண்ணாக இருந்தாலும் வெட்டி வேரை எளிதாக பயிரிடலாம். அதில் வெட்டிவேர் நன்கு வளரும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வரை வேர்கள் நிச்சயம் கிடைக்கும். மணல் பாங்கான நிலமாக இருந்தால், வேர் நன்கு இறங்கி வளரும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். அத்தகைய நிலமாக இருந்தால், இரண்டு டன்னுக்கு மேலும் வெட்டிவேர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் ஒரு அடிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் பயிரிட்டு இருக்கிறோம். புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு நண்பரிடம் இருந்து ஒரு நாற்று ரூ.1 என்ற கணக்கில் வாங்கினேன். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்த முறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். நாற்று அதிகமாக இருந்தால் தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் தெரிந்தாலும் நாற்று நட்ட 15வது நாள் முதல் 25 நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். நாங்கள் பதியம் போட்டுத்தான் நடவு செய்தோம். நடவு செய்வதற்கு முன்பு 3 முறை உழவு ஓட்டினோம். கடைசி உழவை ரொட்டேட்டர் கொண்டு உழுதோம். பின்னர் பதியத்தில் இருந்த நாற்றை எடுத்து நடவு செய்தேன். நடவு செய்த ஒரு மாதத்தில் முதல் களை எடுப்போம். காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட உரங்களை அடியுரமாக இடுவோம். களை எடுக்கும்போது வேர்களில் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது கிளைச்செடிகள் நன்கு வளரும். இந்தத் தருணத்தில் மண் பொலபொலப்பாக இருப்பதால் வேர்கள் பிரிந்து செல்லும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான அளவில் தண்ணீர்ப் பாய்ச்சுவோம். இரண்டாவது களையை 60வது நாளில் எடுப்போம். அப்போது டிஏபி உரம் இடுவோம். இதில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம் செடிகளுக்கு அடியுரமாக செயல்படும்.

அதேபோல் 90வது நாளில் ஒரு களை எடுத்து ஜிப்சம், சூப்பர் பாஸ்பேட் உரம் கொடுப்போம். இந்தத் தருணத்தில் சோலை எடுப்போம். அதாவது வெட்டிவேர் செடியில் காய்ந்த நிலையில் இருக்கும் புற்களை அகற்றுவோம். இவ்வாறு செய்தால்தான் செடிகளின் பக்கவாட்டில் உள்ள வேர்களில் இருந்து புதிதாக புற்கள் முளைத்து வரும். அப்போது வெட்டிவேர் புற்களுக்கு பொட்டாஷ் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ஸ் கொடுப்போம். அதன்பின்னர் ஆறு மாதங்கள் கழித்து களை எடுத்தால் போதுமானது. வெட்டிவேர்ப்புல் நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல 4 முதல் 5 அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும்.

இதற்கு பூச்சிமருந்து அடிக்கத் வேண்டியதில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிக்கொல்லியாக செயல்படும் ஆற்றல் கொண்டது. இதன் வாசனைக்கு எந்தப்பூச்சியும் வராது. ஒரு சில பூச்சிகள் வரும். அப்போது வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படுவோம். வெட்டிவேர் நாற்றுகளை பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகள் பலர் ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ நெருக்கமாக நட்டு பூச்சி விரட்டியாகப் பயன்படுத்துகிறார்கள். வெட்டிவேர் பொதுவாக 11 மாதங்களில் இருந்து 13வது மாதங்களுக்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கர் அறுவடை செய்ய குறைந்தபட்சம் 40 லிருந்து 45 மணி நேரம் ஆகும். செடியின் வேர் அறுபடாமல் அப்படியே பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி மிதமான வெப்பத்தில் காய வைத்து விற்பனை செய்வோம். மேலே உள்ள பச்சை இலைகளை மாட்டுத்தீவனத்திற்காக அருகில் உள்ள விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு அறுவடை செலவு மட்டும் ரூ.25 ஆயிரம் ஆகும். உரச்செலவு, பராமரிப்பு என்று ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 2 டன் வெட்டிவேர் மகசூலாக கிடைக்கும்.

ஒரு கிலோ வெட்டிவேரை சீசனைப் பொருத்து ரூ.130 முதல் ரூ.220 வரை விற்பனை செய்கிறோம். சராசரியாக ஒரு கிலோ வெட்டிவேர் ரூ.150க்கு விற்பனையாகும். அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதில் அறுவடை கூலி, வண்டி வாடகை, உரச்செலவு, பராமரிப்பு செலவு என ரூ.1 லட்சம் செலவு போக ஆண்டுக்கு ரூ.2லட்சம் லாபமாக கிடைக்கிறது. எந்த ஒரு பயிரை சாகுபடி செய்தாலும், மதிப்புக்கூட்டுதல் என்பது மிகவும் அவசியம். நாம் செய்யும் ஒவ்வொரு பொருளும் சமுதாயத்திற்கு பயனுள்ள பொருளாக இருக்க வேண்டும். மதிப்புக்கூட்டுதலின் போது உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களைப் பற்றி பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு பொருளும் வேறு யாரும் செய்யக் கூடாததாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுதுள்ள சந்தையின் முதல் தேவை. வெட்டிவேர்ச் செடியில் இருந்து வேர், வைக்கோல், எண்ணெய் என்று பலவிதமான பொருள்கள் கிடைக்கும். நான் இந்த மூன்றையும் விற்பனை செய்கிறேன். இதன்மூலமும் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஒரு டன் வெட்டிவேரில் இருந்து 8 லிட்டர் ஆயில் கிடைக்கும். இதனையும் விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலமும் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. வெட்டிவேரைப் பொருத்த வரையில் நாங்களே அனைத்தையும் நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். அதனால் தேவைப்படுவர்கள் எங்களைத் தேடி வந்து இந்த வாசனை மிகுந்த, உடலுக்கு ஆரோக்கியமான வெட்டிவேரை வாங்கிச் செல்கிறார்கள். வெட்டிவேரை தற்போது திருமணத்திற்குத் தேவையான மாலையாக கட்டுவதால் ஏராளமான பூக்கட்டும் தொழிலாளர்களும் வாங்கிச்செல்கிறார்கள்” என்கிறார் கமலநாதன்.
தொடர்புக்கு:
கமலநாதன் 95662 03297.

Related posts

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்

சென்னை ஐஐடி சர்வதேச இசை மாநாட்டில் தமிழ் இசை புறக்கணிப்பு: தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

குளறுபடிகளை சரி செய்து வருவாய் அதிகரிக்க வழிகாட்டி மதிப்பு திருத்த பணிகள் தீவிரம்: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்