வெம்பக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன், பட்டை கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் நேற்று தங்கத்திலான பட்டை மற்றும் அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில், கடந்தாண்டு மார்ச் 16ம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணி துவங்கியது.

இதில், 3,254 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவைகள் அனைத்தும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்.6ம் தேதி வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான ஆட்டக்காய்கள், விளையாட்டு பொருட்கள், உருவங்கள், பதக்கங்கள், பானைகள், புகைப்பான்கள் மற்றும் அடித்தளம், கற்கோடரி, நுண்கற்கால மூலப்பொருட்கள், வட்ட சில்லுகள், செவ்வந்திக்கல் மணிகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், கிண்ணங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், நேற்று நடந்த அகழாய்வில் 2 கிராம் தங்கப்பட்டை, 2.2 கிராம் தங்கத்திலான குமிழ் வடிவ அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 1,200க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்