வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பூசாரி பலி: இதுவரை 9 பக்தர்கள் உயிரிழப்பு

தொண்டாமுத்தூர்: பூண்டி வெள்ளிங்கிரி மலையில் ஏறும்போது, சென்னை பூசாரி மூச்சுதிணறி பலியானார். இந்த சீசனில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். கோவை அருகே பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக ஆண்டுதோறும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் மலை ஏறும்போது உயிரிழப்பது தொடர்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வேலூர் கிராமம் டாக்டர் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பூசாரி புண்ணியகோடி (46). இவர், அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருப்பதுடன், விசேஷங்களுக்கு சாமியானா பந்தல் போடும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சுலோச்சனா (35) என்ற மனைவியும், கவிப்பிரியன் (15) என்ற மகனும், காவ்யா (11) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மலை ஏறுவதற்காக 10 நண்பர்களுடன் வந்த புண்ணியகோடி, பூண்டி வெள்ளிங்கிரி மலையில் ஏற தொடங்கியுள்ளார். 1-வது மலை ஏறிக்கொண்டிருக்கும் போது இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாரம் தூக்கும் டோலி தொழிலாளர்கள் உதவியுடன் புண்ணிய கோடியை அடிவாரம் கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவ பணியாளர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆலாந்துறை போலீசார், பூசாரி புண்ணியகோடி உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சீசனில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூடுதலாக 5 மலர் சிற்பம் அமைக்கும் பணி தீவிரம்..!!

ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை