லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்வில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த தலைவர்கள் அங்குள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ தொகுதியில் கடந்த காலங்களில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் போட்டியிட்டுள்ளார். லக்னோவில் 5ம் கட்டமாக மே 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தேனியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்