நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு ஒன்றிய அரசு பச்சைத்துரோகம்: வைகோ கண்டனம்

சென்னை: நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு பச்சைத் துரோகம் செய்துள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. 2015ம் ஆண்டு சென்னை சந்தித்த பெருமழை வெள்ளம், அதன் பின்னர் உருவான வர்தா புயல், ஒகி புயல், கஜா புயல், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றுக்கு கடந்த 9 ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜ அரசிடம் கேட்ட தொகை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி ரூபாய்.

ஆனால் மோடி அரசு அளித்த தொகை வெறும் ரூ.5884.49 கோடி மட்டுமே. தமிழ்நாடு அரசு கேட்ட தொகையில் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு ஒன்றியத்திற்கு வரியாக கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. ஆனால் பாஜ ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் 73 பைசா ஒன்றிய அரசு வழங்குகிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசு 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை 3273 கோடி ரூபாய், அதாவது திட்ட மதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜ அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 18வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அப்போது மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்; நிதிப் பகிர்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும்.

* தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி ராகுல்காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி அஞ்சுகிறார்: செல்வப்பெருந்தகை விமர்சனம்

75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை காவல் துறையின் பந்தம் சேவை திட்டம்: செல்போன் எண் அறிவிப்பு

கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்குமாறு கோர முடியாது: ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவு