மாநிலங்களவையில் 35 நிமிட இடைவெளியில் திரிணாமுல் காங். எம்பியின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

புதுடெல்லி: மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்பி டெரக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த 35 நிமிடத்தில் மீண்டும் அவைக்கு திரும்பினார். மாநிலங்களவையில் நேற்றும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் விதி 267ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீசை ஏற்று விவாதம் நடத்த வேண்டுமென அவையின் மைய பகுதிக்கு வந்து ஆவேசமாக பேசினார்.

அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், அவரது பெயரை குறிப்பிட்டு கூறியும் டெரிக் ஓ பிரையன் இருக்கையில் அமரவில்லை. இதனால், ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்ய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தீர்மானம் கொண்டு வந்தார். அதை உடனடியாக ஏற்ற தன்கர், எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 35 நிமிடம் கழித்து 2 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் ஓ பிரையன் அவைக்கு வந்திருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த தன்கர், ‘‘சஸ்பெண்ட் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அந்த தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் ஓ பிரையன் அவைக்கு வந்திருக்க முடியாது. எந்த உறுப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பது எப்போதுமே எனக்கு வேதனைக்குரியது. தீர்மானம் நிறைவேற்றப்படாததால் பிரையனின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது’’ என்றார்.

*பியூஸ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
நியூஸ் கிளிக் இணையதள விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் காங்கிரஸ் தலைவர்களை ‘துரோகிகள்’ என்றும், ‘பணம் வாங்கியவர்கள்’ என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு விதிமுறை மீறிய வார்த்தைகளை பயன்படுத்தியதால் அவர் மீது காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, ஜேடியு, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

Related posts

காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி

அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன்

கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி