தேர்தல் பணம் விநியோக தகராறில் கட்சி பிரமுகருக்கு வெட்டு திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி கைது: மேலும் 8 பேருக்கு வலை

திருவாரூர்: திருவாரூரில் தேர்தல் பண விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சொந்த கட்சி பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் தேனியில் பதுங்கி இருந்த பொதுசெயலாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் மது (எ) மதுசூதனன் (40). பாஜ மாவட்ட விவசாய அணி பொது செயலாளராக பதவி வகித்த இவர், பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2ஆண்டுக்கு முன் கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் கட்சியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மக்களவை தேர்தலையொட்டி பாஜ வேட்பாளர்களான நாகப்பட்டினம் ரமேஷ் மற்றும் தஞ்சாவூர் கருப்பு முருகானந்தம் ஆகியோருக்காக பண விநியோகத்தை கட்சி நிர்வாகிகளிடம் கொடுக்காமல் மதுசூதனன் நேரடியாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட தலைவர் பாஸ்கர், பொது செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் மதுசூதனன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

கடந்த 8ம் தேதி இரவு குடவாசல் ஓகை பாலம் கடை அருகே மதுசூதனன் நின்று கொண்டிருந்தபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் , மதுசூதனன் அரிவாளால் வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மதுசூதனன் மனைவி ஹரினி கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் போலீசார் பாஸ்கர், செந்திலரசன் உட்பட 12 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்தனர்.

இதுதொடர்பாக பாஸ்கர், கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சரவணன் (எ) பைபா சரவணன்(30), பாஜ விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட பொறுப்பாளரும், திருவாரூர் காட்டூரை சேர்ந்தவருமான ஜெகதீசன்(31) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செந்திலரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூலிப்படையினரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தேனியில் செந்திலரசன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் திருவாரூர் தனிப்படை போலீசார் நேற்று காலை தேனி சென்று பொது செயலாளர் செந்திலரசனை கைது செய்து குடவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த தீனதாயளன்(25), திருவிடைமருதூர் பவண்டரீகபுரத்தை சேர்ந்த விஜய் , மற்றொரு விஜய், ஹரி, பாஜ பிரமுகர்களான குடவாசல் பிரகாஷ், ஓலையாமங்கலம் சாமிநாதன் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு