திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ரூ.5 கோடியில் நிரந்தர வண்ண மின்விளக்கு அலங்காரம்: அரசின் அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு அனைத்து நாட்களிலும் வண்ண விளக்குகள் நிரந்தரமாக ஜொலிக்கும் வகையில் ரூ.5 கோடியில் ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் இக்கோயிலை தரிசிக்கவும், கிரிவவலம் செல்லவும் இங்கு வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க அண்ணாமலையார் கோயில், வியக்கத்தக்க கட்டுமான கலைக்கும், நுட்பத்துக்கும் சான்றாக இருக்கிறது.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான இக்கோயில், பல்வேறு காலகட்டங்களில் படிப்படியாக கட்டப்பட்டது என்றாலும், ஒரே காலத்தில் கட்டியதை போன்ற எழிலை பெற்றிருக்கிறது. இந்நிலையில், அண்ணாமலையார் திருக்கோயில் கோபுரங்களின் எழிலை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, அனைத்து நாட்களிலும் வண்ண விளக்குகள் ஜொலிக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியான தகவல் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மட்டுமே கோயில் கோபுரங்களுக்கு வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். தற்ேபாது, ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் கோயில் கோபுரங்கள் காட்சிதரும் வாய்ப்பு இந்த அறிவிப்பின் மூலம் கிடைத்திருக்கிறது. அதேபோல், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பயன்பெறுவதற்காக, பழனி திருக்கோயில், ராமேஸ்வரம் திருக்கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற 10 கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை மையம் கிரிவலப்பாதையில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகே, ரூ.3.50 கோடியில் பசுக்கள் காப்பகம் அமைத்தல், உண்ணாமுலையம்மன் தீர்த்தகுளம், நிருதி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கிருஷ்ணர் தீர்த்தம், சனி தீர்த்தம், பழனி ஆண்டவர் தீர்த்தம், வருண தீர்த்தம் ஆகிய குளங்களை ரூ.3 கோடியில் சீரமைத்தல், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த அம்மணி அம்மன் மடம் ரூ.2 கோடியில் சீரமைக்கப்படும், ராஜகோபுரம் எதிரில் ரூ.5.99 கோடியில் கடைகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்புகளும், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளில் ஒன்றான குபேர லிங்க சன்னதியில் அன்னதானம் வழங்குதல் போன்ற அறிவிப்புகள் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அறநிலையத்துறையின் இந்த அடுக்கடுக்கான அறிவிப்புகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளன. எனவே, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த புதிய திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். அதன்மூலம், ஆன்மிக நகரான திருவண்ணாமலையும் வளர்ச்சி பெறும் என்பதால், திருவண்ணாமலை நகர மக்களும் இந்த அறிவிப்புகளால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து