திருவண்ணாமலை தாலுகாவில் நடந்த 2வது நாள் ஜமாபந்தியில் மனு அளிக்க திரண்ட பொதுமக்கள்-டிஆர்ஓ பெற்று விசாரணை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுகாவில் நடைபெற்ற 2வது நாள் ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்களை அளிக்க பொதுமக்கள் திரண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும், வருவாய் கணக்குகளை தணிக்கை செய்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகாவில் தொடர்ந்து 2வது நாளாக நடந்த ஜமாபந்தியில் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால், ஆடையூர், அடிஅண்ணாமலை, தேவனந்தல், கோசாலை உள்ளிட்ட 21 கிராமங்களை சேர்ந்த வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.

சம்பந்தப்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 7 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுடைய கணக்குளை தணிக்கைக்கு அளித்தனர். தொடர்ந்து பட்டா மாற்றம், அரசு உதவிகள், மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை டிஆர்ஓவிடம் அளித்தனர். 3வது நாளான இன்று துரிஞ்சாபுரம் உள்வட்டத்துக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம், களஸ்தம்பாடி, சொரகுளத்தூர், மாதலம்பாடி, கருத்துவாம்பாடி, இனாம்வெளுக்கனந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்கள் தெரிவிப்பதுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளான நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் வட்டாட்சியர் சாப்ஜான், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், ஜமாபந்தி மேலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக நடந்த ஜமாபந்திக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குமரன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். இதில், 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். தொடர்ந்து, மனுக்களை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி அலுவலர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரனிடம் அளித்தனர்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று தானிப்பாடி உள் வட்டத்தை சேர்ந்த தானிப்பாடி, செ.ஆண்டாப்பட்டு, டி.வேலூர், சின்னியம்பேட்டை, ரெட்டியபாளையம், மலையனூர் செக்கடி, மோத்தக்கல், ஆத்திப்பாடி, புதூர்செக்கடி, போந்தை, நாராயணகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் 2வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பா.முருகேஷ் பெற்று விசாரணை நடத்தினார்.

அப்போது தாசில்தார் அப்துல் ரகூப், துணை தாசில்தார் விஜயகுமார், பிடிஓ பரமேஸ்வரன், ஆர்ஐ யுவராணி உள்பட பலர் உடனிருந்தனர்.கலசபாக்கம்: கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தியில் கடலாடி உள் வட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 125 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டது. அப்போது தாசில்தார் ராஜராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு தாசில்தார் மலர்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

நாளை துவங்க இருந்த நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக புகார்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்: போபால் ஐகோர்ட் உத்தரவு

16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்